“நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்?”

By காமதேனு

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் வழங்கும் 6 வகையான அடிப்படை உரிமைகளில், சமய வழிபாட்டு உரிமையும் ஒன்று. இந்தியக் குடிமக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் எனும் உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. மதம் மாறுவதும் ஒருவரது அடிப்படை உரிமைதான்.

அதேவேளையில் சில மாநிலங்கள், கட்டாய மதமாற்றத்தைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவருவதும் உண்டு. கர்நாடக மாநில பாஜக அரசு அதற்கான முனைப்பில் இருக்கிறது. கர்நாடகச் சட்டப்பேரவையில் இச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக, உடனே விவாதிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாகவே கர்நாடகத்தில் சிறுபான்மையினர் மீதான மிரட்டல்கள் தொடர்ந்து நடக்கின்றன. அம்மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த கொண்டாட்டங்களின்போது வலதுசாரி அமைப்பினர் சென்று பிரச்சினை செய்தனர்.

இந்நிலையில், கர்நாடகத்தின் தும்கூர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஒரு குடும்பத்தாரை, வலதுசாரி அமைப்புகள் மிரட்டிய காட்சிகள் அடங்கிய காணொலி இன்று வெளியாகியிருக்கிறது.

டிசம்பர் 28-ல் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் தொடர்பான அந்தக் காணொலியில், இந்து மதத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது குறித்து வலதுசாரி அமைப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏன் தாலி அணியவில்லை, பொட்டு வைத்துக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கேட்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், “அதைக் கேட்க நீங்கள் யார்? நாங்கள் இந்துக்கள்தான். எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட எங்களுக்கு உரிமை உண்டு” என்று பதில் சொல்கிறார்கள். மேலும், “தாலியை நான் அகற்றவும் செய்வேன். வெளியே போங்கள்” என்றும் ஒரு பெண் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்கிறார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குக் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டார்கள். எனினும், இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. ‘வன்முறைச் சம்பவங்கள் நிகழாததால் வழக்குப் பதிவுசெய்யவில்லை’ எனப் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE