உ.பி ரெய்டின் உச்ச காமெடி: வாசனை தவறிய சோதனை!

By காமதேனு

உத்திர பிரதேசத்தில், பாஜக-சமாஜ்வாதி கட்சியினர் இடையே பியூஷ் ஜெயின் என்பவர் மீதான ரெய்டை முன்வைத்து பெரும் சர்ச்சை எழுந்தது. ரெய்டுக்கு ஆளாகி ரூ192 கோடி ரொக்கம், 23 கிலோ தங்கத்துடன் பிடிபட்டிருக்கும் பியூஷ் ஜெயின் யாருடையை கட்சியை சேர்ந்தவர் என்பதே இந்த மோதலின் அடிப்படை.

கடந்த மாதம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த புஷ்பராஜ் ஜெயின் என்பவர், கட்சி பெயரிலேயே சென்ட் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தார். சென்ட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர் கட்சியின் எம்எல்சி உறுப்பினரானகவும் உள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னூர் கன்னூஜ் நகரில் பியூஷ் ஜெயின் என்பவர் வீடு மற்றும் தொழிலகங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் கூட்டாக சோதனை மேற்கொண்டனர். நாள்கணக்கில் நீடித்த இந்த சோதனையில் ரொக்கமாக மட்டுமே ரூ192 கோடி கிடைத்தது. தங்கம் 23 கிலோ, வெள்ளி பல நூறு கிலோக்கள் மற்றும் பல்வேறு வர்த்தக முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. இந்த பியூஷ்ஜெயின் பல்வேறு தொழில்கள் நடத்தி வருபவர் என்றபோதும், இவரது பிரதான தொழில் சென்ட் வியாபாரம்.

இந்த வகையில் இவர்தான் சமாஜ்வாதி கட்சியின் பெயரில் சென்ட் தயாரித்தவர், கட்சித்தலைவர் அகிலேஷுக்கு நெருக்கமானவர் என்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்தது. இதனை நம்பி உபி பாஜகவினர் மட்டுமல்ல, அமித்ஷா, மோடி வரை பாஜக தலைவர்கள் பலரும் சமாஜ்வாதி கட்சியை தாக்கி மேடையில் முழங்கினார்கள். ஆரம்பத்தில் அவற்றை மறுத்து வந்த சமாஜ்வாதியினர் பின்னர் அர்த்தபுஷ்டியோடு அமைதியானார்கள். பியூஷ் ஜெயினுக்கு எதிரான ரெய்டு நடவடிக்கைகள் முடிந்த பின்னரே குட்டு வெளிப்பட்டிருக்கிறது.

ரெய்டுக்கு ஆளான பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் அல்ல என்பதும், அதே கன்னூஜில் வசிக்கும் புஷ்பராஜுக்கு பதிலாக அடையாளம் மாறி ரெய்டு பாய்ந்திருக்கிறது என்பதும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பி.சிதம்பரம் போன்றவர்கள், ’இது போல காமெடி உண்டா’ என்று கேள்வி எழுப்பிய பின்னரே பாஜகவினர் சுதாரித்தனர். சமாஜ்வாதி தலைவர் ’அப்போதிலிருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். பாஜவினர் அடையாளம் மாறி தங்கள் கட்சிக்காரர் மீது ரெய்டு தொடுத்திருக்கிறார்கள்’ என்று கேலி செய்தார்.

சுதாரித்துக்கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள், இப்போது நிஜமான சமாஜ்வாதி சென்ட் தொழிலதிபரான புஷ்பராஜின் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் சோதனையை தற்போது நடத்தி வருகின்றனர். பியூஷ் ஜெயின் வசமிருந்து பண்டல் பண்டலாக 2000 ரூபாய் கற்றைகள் கைப்பற்றப்பட்டதில், ‘இதுதான் மோடி அரசாங்கம் மேற்கொண்ட பணமதிப்பிழப்பின் லட்சணம்; கருப்பு பணம் ஒழிந்து விட்டது பாருங்கள்’ என்று ஒவைஸி போன்றவர்கள் தனியாக சீண்டி வருகிறார்கள்.

ரெய்டில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளோ, தங்கள் இரண்டு சோதனை நடவடிக்கைகளுமே முறைப்படி நடைபெறுபவை என்று விளக்கம் தந்துள்ளனர். ஆனபோதும் வாசனை மாறிய சோதனைகள் உபி அரசியல் களத்தில் வெகுவாய் பகடிக்கு ஆளாகி இருக்கின்றன. தேர்தல் நெருக்கத்தில், உபி அரசியல் களம் இன்னும் என்னென்ன வேடிக்கைகளை வைத்திருக்கிறதோ, தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE