நாகாலாந்தில் ஆஃப்ஸ்பா சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

By காமதேனு

நாகாலாந்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்து செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.

இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வட கிழக்கு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன் போன்றோர் கலந்துகொண்டனர். ஆஃப்ஸ்பா சட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஆய்வை நடத்த ஒரு குழுவை அமைப்பது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, 14 பேரைச் சுட்டுக் கொன்ற ‘21 பாரா சிறப்புப் படை’ வீரர்கள் மீது விசாரணை நடத்த அம்மாநிலத்தைச் சேர்ந்த புலனாய்வுக் குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து, நாகாலாந்தில் ஆஃப்ஸ்பா சட்டம் திரும்பப் பெறப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், அம்மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘பதற்றத்துக்குரிய பகுதி’ என அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு இச்சட்டம் நாகாலாந்தில் நீட்டிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்தில் இச்சட்டம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படும் என 2020 டிசம்பர் 30-ல் மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்தது. பின்னர் இச்சட்டம் 2021 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படும் என ஜூன் 30-ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டம் நீட்டிக்கப்படுகிறது.

ஆஃப்ஸ்பா சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE