ஆந்திரா, ஒடிசா முதல்வர்கள் பதவியேற்பு முதல் குவைத் தீ விபத்து வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> ஜூன் 20 - 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 - 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார். முதல் நாளே நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன், வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இடையில் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை கூட்டத்துக்கு விடுமுறை.

> ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடக்கம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இதன்மூலம் சுமார் 2 இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.

இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.

> “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு: "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் கடிதம் பெறும் பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பிபிடிசி என்ற தனியார் தேயிலை நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028ம் ஆண்டுடன் முடிவடைவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அந்நிறுவனம் சில பணப் பலன்களை அறிவித்து, விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாக கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெற முயற்சி நடைபெற்று வருகிறது. இதில், தாங்கள் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

> “இண்டியா கூட்டணியின் வெற்றி ஜனநாயகத்தின் பாதுகாப்பு கவசம்”: “மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்,” என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

> விஷவாயு கசிவால் புதுநகர் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை: ஹைட்ரஜன் சல்பைட் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதிகளில் துர்நாற்றம் பரவலாக இருப்பதாகக் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். புகாரை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

> 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதனிடையே “உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மோகன் மாஜி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

> தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா?: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்ட விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, மத்திய உள்துறை அமித் ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.

> ஜூன் 24 - ஜூலை 3 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: வரும் 24-ம் தேதி 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல், சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.

> ஜம்முவில் நடந்த என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

> குவைத்தில் தமிழர்கள் பணிபுரிந்த கட்டிடத்தில் தீ விபத்து: குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை குவைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE