பட்டியலின சிறுமி மீதான தாக்குதல்: உபி அரசியலின் மையமானது

By காமதேனு

பட்டியலின சிறுமி தாக்கப்பட்ட சம்பவம், தேர்தலுக்காக காத்திருக்கும் உத்தர பிரதேசத்தின் அரசியல் மையமாக மாறி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பட்டியலின சிறுமி ஒருவரை, உயர் சாதியினர் சிலர் சூழ்ந்து கழியால் தாக்கும் வீடியோ நாடு முழுக்க தீயாய் பரவியது. வீட்டில் காணாமல்போன பொருள் ஒன்றுக்கான விசாரணையில், பட்டியலின சிறுமி தாக்கப்பட்டது தெரியவந்தது.

வீடொன்றில் பெண்கள், ஆண்கள் குழுமிய இடத்தில், சிறுமியின் பாதங்களை குறிவைத்து ஆண்கள் கழியால் அடிக்கிறார்கள். பெண்கள் உட்பட சுற்றியிருந்த எவரும் அதைத் தடுக்கவோ, விசாரிக்கவோ இல்லை. ஆளாளுக்கு கேமராவும் கையுமாக அந்த வதை படலத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட வீடியோ சில மணி நேரங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக நாடு முழுதும் பரவியது.

அதிலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானியின் தொகுதியான அமேதியில், ஒரு சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் என்பதால், கூடுதல் கவனம் பெற்றது. பழங்குடியின சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, ஐநா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஆம்னெஸ்டி அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

உத்தர பிரதேசத்தை மையமாகக் கொண்டு கட்சிப் பணிகளில் தீவிரமாக இயங்கிவரும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பழங்குடி மக்களுக்கு எதிராக நாளொன்றுக்கு 34 குற்றங்கள் உபியில் அரங்கேறுவதாக கொதித்த அவர், 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் நெடுகப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

இதையடுத்து அமேதி போலீஸார் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டனர். அதில் பழங்குடியின சிறுமியை தாக்கியதாக 4 நபர்கள் மீது போக்ஸோ, எஸ்சி/எஸ்டி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். எனினும், அதிகாரபூர்வமற்ற தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டிய சூழலில், உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை மையப்படுத்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE