சீன ராணுவத்தினரைப் போல இந்திய வீரர்களுக்கும் குளிர் தாங்கும் ஆடைகள்!

By ஆர்.என்.சர்மா

இமயமலைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சீன வீரர்களுக்கென்று சிறப்பான குளிர் தாங்கும் உடைகளையும் கண்ணாடி, கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட வசதிகளையும் அந்நாட்டு அரசு தயாரித்து அளித்திருப்பதாகவும் இந்தியச் சிப்பாய்கள் இந்த வசதிகள் இல்லாமல் குளிரில் விறைத்துக்கொண்டு காவல் காப்பதாகவும் சீனாவின் அரசு நாளேடு ‘குளோபல் டைம்ஸ்’ சில வாரங்களுக்கு முன்னால் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய ராணுவ வீரர்களுக்கும் இத்தகைய உடைகள் தரப்படுகின்றன. ஆனால் அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்த ஆடைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதுமட்டுமல்ல. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனம் மட்டுமே தனியாகத் தயாரித்து வழங்கினால் தாமதம் நேரும் என்பதாலும், இந்தத் தொழில்நுட்பம் ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கிலும் இந்தியாவின் 5 பெரிய ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது டிஆர்டிஓ.

இதை டிஆர்டிஓ நிறுவனத்தின் தலைவர் ஜி சதீஷ் ரெட்டி, டெல்லியில் நேற்று (டிச.28) அறிவித்தார். சியாச்சின், லடாக், இமாசலப் பிரதேசம் என்று எல்லா இடங்களிலும் இந்த ஆடைகள் பயன்படும். கடுங் குளிரை மட்டுமல்ல, கடுமையான கோடையையும் தாங்கும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படும்.

கோடைக்காலத்தில் உடலிலிருந்து வியர்வை அதிகம் வெளியேறி நீர்ச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும். கடும் குளிர்காலத்தில் தோல்கள் வெடித்து நரம்புகளை பாதிக்கச் செய்யும். இவ்விருவித வெப்ப நிலையும் இமயமலைப் பகுதியில் ஒரே சமயத்திலேயே நிலவும் என்பதால் இந்த ஆடைகள் அதைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும். இந்தத் துணி மூன்று அடுக்குகளில் இருக்கும். இதில் நெய்யப்படும் ஆடைகள் நீண்டகாலம் உழைக்கும்.

இதை அணிந்துகொண்டு வீரர்கள் தங்களுடைய வேலைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள முடியும். கடுமையான வெயில் அடிக்கும்போது உடலில் ஊறும் வியர்வையை ஆடை உறிஞ்சிவிடும். எனவே ராணுவ வீரர்களுக்குக் கசகசப்பு போன்ற அசவுகரியங்கள் ஏற்படாது. அரிப்பு, தோல் சிவப்பது போன்றவற்றுக்கும் இடம் இருக்காது.

கை, கால்களை நீட்டி மடக்கவும் துப்பாக்கி, பீரங்கிகள், தொலைநோக்கி போன்றவற்றை இயக்கவும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைக் கையாளவும் இந்த ஆடை எந்த வகையிலும் இடையூறாக இருக்காது.

5 இந்திய நிறுவனங்களிடம் இந்தத் தொழில்நுட்பம் தரப்படுவதால் ஏராளமான அளவில் இந்தத் துணிகள் குறுகிய காலத்தில் உள்நாட்டிலேயே தயாராகிவிடும்.

அதைவிட முக்கியம், இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டவும் அனுமதிக்கப்படும். இதனால் இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமாவதுடன் ஏற்றுமதி வருவாயும் பெருகும்.

இதையும் வாசியுங்கள்:

குளிர்காலத் தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE