நல்லாட்சி தரும் நவீன் பட்நாயக்!

By ஆர்.என்.சர்மா

இந்திய அரசியல் வானில் எத்தனையோ நட்சத்திரங்கள் மின்னினாலும், அவர்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனித்தன்மை மிக்கவர் என்றே சொல்லலாம். தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர், கருணாநிதி போன்றவர்களை ஒவ்வொரு வகையில் நினைவுபடுத்துகிறார் நவீன். பிஜு ஜனதா தளம் குடும்பக் கட்சியா என்று கேட்டால் ஆமாம் குடும்பக் கட்சிதான் என்று சொல்லிவிடலாம். ஆனால் எந்தக் குடும்பமும் ஆதிக்கம் செலுத்தாமல் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் குடும்பங்களால் வழிநடத்தப்படும் கட்சி என்று பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) நிச்சயமாகச் சொல்ல முடியும்.

காமராஜரைப் போலவே கட்டை பிரம்மச்சாரி நவீன் பட்நாயக். மாநிலம்தான் அவருடைய வீடு, மக்கள்தான் அவருடைய சொந்தம். எளிமையானவர். தேசிய அரசியலில் உயர் பதவிக்கு ஆசைப்படாமல் தன்னுடைய உயரம் எது என்று கருணாநிதி போலத் தெரிந்து ஒதுங்கி நிற்பவர் நவீன் பட்நாயக். மம்தா பானர்ஜியுடன் பேசத் தயங்குவதில்லை, அதே சமயம் அவருடைய ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அவர் விசிறியும் அல்லர்.

கணிப்புகளைத் தவிடுபொடியாக்கியவர்

1997-ல் ஒடிசாவில் இந்தக் கட்சி தொடங்கப்பட்ட போது ஓரிரு ஆண்டுகள் இந்தக் கட்சி இருந்தால் அதிசயம் என்று நினைத்தவர்கள் பலர். அதற்குக் காரணம் ஒடிசாவின் ஈடு இணையற்ற தலைவரான பிஜு பட்நாயக்கின் இளைய மகன் என்ற தகுதியைத் தவிர அவருக்கு வேறு எந்தச் சிறப்புத் தகுதியும் இருப்பதாக அரசியல் உலகம் கருதவில்லை. அவருடைய தனித்தன்மையைக் கேள்விப்பட்டவர்கள், அப்படியா நிச்சயம் இது அடையாளம் இல்லாமல் போகப் போகும் கட்சிதான் என்று ஆர்ப்பரித்தனர். காரணம் நவீன் பட்நாயக்குக்கு தாய்மொழியான ஒடியாவில் பேச, எழுத, படிக்கத் தெரியாது. வெளிநாட்டில் படித்த அவர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். இலக்கிய ரசிகர். அவரே நாவலும் எழுதியிருக்கிறார். அப்பா இருந்தபோது அரசியல் பக்கமே வராதவர். அவருடைய மூத்த அண்ணன் பாஜகவில் உறுப்பினராகவே இருந்தபோதும், பிஜு ஜனதா கட்சியைத் தொடங்கினார் நவீன்.

ஆரம்பத்தில் பாஜகவுடன் சேர்ந்துதான் தேர்தலில் போட்டியிட்டார். மத்தியிலும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தார். மாநில பாஜக தலைமை தன்னுடைய வலுவைத் தவறாக கணித்து அதிகத் தொகுதிகளைக் கேட்டது. தராவிட்டால் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியமைப்போம் என்ற அளவுக்குச் சென்றது. நவீன் கண்டுகொள்ளவில்லை. பாஜகவால் முக்கிய எதிர்க்கட்சியாகத்தான் வர முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் மக்களிடையே ஆதரவு இருக்கிறது. ஆனால் சரியான மாநிலத் தலைமையும் இல்லை, மத்தியத் தலைமையும் வழிகாட்டவில்லை.

அலட்டிக்கொள்ளாத தலைவர்

1997-ல் பிஜு ஜனதா தளம் தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.26) எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஐந்து முறை சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். முதலமைச்சராகத் தொடர்ந்து இருபதாண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டார். கட்சிக்குச் சோதனைகள் வராமல் இல்லை. சொந்தக் கட்சியிலேயே ஒரு மூத்த தலைவர், நவீனைப் பதவியிலிருந்து இறக்குகிறேனா இல்லையா பாருங்கள் என்று சவால் விட்டுவிட்டு சென்றார். அவர்தான் பதவி இழந்தார்.

அதிக ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாத முதலமைச்சர் நவீன் பட்நாயக். நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனே அறிக்கை விடுவது, ட்விட்டரில் சாடுவது, இன்ஸ்டாகிராமல் புகைப்படம் வெளியிடுவது போன்ற பரபரப்பு அரசியல்வாதி அல்ல நவீன். எத்தனையோ கட்சிகளில் உளறுவதற்கென்றே பெயரெடுத்த தலைவர்களும் ஊடகத் தொடர்பாளர்களும் தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டாலும் நவீனோ அவருடைய கட்சியின் தளகர்த்தர்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சிகளாகவே தொடர்கிறார்கள்.

உலக சாதனை

மிக மிக பின்தங்கிய மாநிலம் என்று பெயரெடுத்த ஒடிசாவில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்தப் புயல் வந்தாலும் மனித உயிரிழப்பே இல்லாமல் அனைவரையும் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டி வந்து தங்கவைப்பதையும் உணவு, உடை, குடிநீர், மருத்துவ வசதி செய்து தருவதையும் அன்றாட நிகழ்வு போலச் செய்துவருகிறது ஒடிசா மாநில அரசு. மாநில விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என்று எல்லாத் தரப்பினரும் அவரவர் வேலைகளைப் பார்க்கின்றனர். கோரிக்கைகள் என்றால் முன்வைத்துப் போராடவும் செய்கின்றனர். காவல் துறை அத்துமீறலோ அடக்குமுறைகளோ கிடையாது.

நாடாளுமன்றத்தில் மாநிலம் சார்பில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தவறியதே கிடையாது. நாடாளுமன்ற அமளிகளிலும் பங்கேற்காமல், ஆளும் கட்சிக்கும் துதி பாடாமல் தனது கடமையைச் சரிவர நிறைவேற்றும் கட்சி பிஜு ஜனதா தளம் மட்டுமே.

மாநில அமைச்சரவை அடிக்கடி கூடி பிரச்சினைகளை விவாதிக்கிறது. அது எடுக்கும் முடிவுகளைத் திறமை வாய்ந்த அதிகாரிகள் நிறைவேற்றுகின்றனர். மிக மிகத் தொலைதூரங்களில் இருந்த மலைப்பிரதேசப் பழங்குடி கிராமங்களுக்குக்கூட அரசு இருப்பது தெரியும் வகையில் நிர்வாகம் அவர்களுடைய வசிப்பிடங்களுக்கே சென்று வசதிகளைச் செய்கிறது.

நவீன் பட்நாயக் தரும் ஊக்கத்தால்தான் இந்திய ஹாக்கி அணியே வீறுகொண்டு எழுந்தது. இதில் ஆடவர் – மகளிர் என்ற பேதமே கிடையாது. சமீப ஆண்டுகளாக விளையாட்டுகளில் அதிலும் தனிநபர் போட்டிகளில் ஒடிசா தலைசிறந்து விளங்குகிறது. மாநில மக்கள் அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அது ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுகிறது.

பிஜேடி கட்சியின் எஜமானர்கள் மக்கள்தான். எங்களுக்கு தில்லியில் எஜமானர்கள் இல்லை. மக்களுடைய விருப்பத்தின்பேரில்தான் எதையும் செய்கிறோம். தவறு செய்தால் மக்கள் எங்களைத் தண்டிப்பார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு மாநிலக்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்றால் அது நவீன் பட்நாயக்தான்.

வறுமை ஒழிப்பு

கடந்த இருபது ஆண்டுகளில் ஒடிசாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதாண்டுகளுக்கு முன்னால் 63 சதவீத மக்கள் வறியவர்களாக இருந்தனர். இப்போது அது 29 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 80 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் மேலே வந்திருக்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் இதை மேலும் 10 சதவீதம் குறைப்போம் என்று இப்போதும் நிதானத்துடன் பேசுகிறார் நவீன். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களை நவீன் அரசு சிறப்பாகச் செய்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தில்கூட 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறார். நவீன் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளால் சுமத்த முடியவில்லை. அவருடைய ஆட்சி நிர்வாகம் வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலும் நடக்கிறது. தென்னிந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் நவீன். அது மட்டுமல்லாமல் அவர்களையே ஆலோசகர்களாகவும் வைத்துத் திறம்படச் செயல்படுகிறார். ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பிவிடுகிறார்.

பாடம் சொன்ன தலைவர்

2019 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இறுதியில் 22 இடங்களில்தான் அக் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. பிஜு ஜனதா தளம் 114 இடங்களில் வென்று அனைவரின் வாயையும் அடைத்துவிட்டது. 2000 முதல் 2009 வரையில் பிஜு ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணிக் கட்சியாக ஆட்சியிலும் இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தலைக்கனம் அதிகமான மாநில பாஜக தலைவர்கள் நவீன் பட்நாயக்கை ஒதுக்கிவிட்டு தங்களாலேயே ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டனர். நவீன் அதற்காக அவர்களிடம் கெஞ்சிக்கொண்டு பேரம் பேசாமல், சரி போங்கள் என்று விடை கொடுத்து அனுப்பிவிட்டார். இப்போது ஏகபோகமாக ஆட்சி செய்கிறது பிஜு ஜனதா தளம். இதில் மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் பாடம் இருக்கிறது.

அடுத்து பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏராளமான நலத்திட்டங்களுக்கும் மகளிர் சுயவேலைவாய்ப்பு அமைப்புகளுக்கும் நிறைய நிதியை ஒதுக்கியிருக்கிறார் நவீன். அடுத்த வெற்றிகளுக்கும் தயாராகிவருகிறது கட்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE