மது அருந்துவோர் பிஹாருக்கு வரவேண்டிய அவசியமில்லை!

By காமதேனு

பிஹார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அதையும் மீறி சாராயம் காய்ச்சுவோர் மீது கள்ளச்சாரய வழக்கு பதிவுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு, அம்மாநில அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது.

மேலும், பொது இடங்களில் மது குடிப்போருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், வீட்டில் குடித்துவிட்டு குடும்பத்தினரையோ அண்டை வீட்டாரையோ கொடுமைப்படுத்தினால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் அம்மாநில மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அமலில் உள்ளன.

இந்நிலையில், ரோத்தோஸ் மாவட்டம் சாசாராம், நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ''பிஹார் மாநிலத்துக்கு வருபவர்கள், ‘கொஞ்சமாவது மது அருந்த அனுமதி கொடுங்கள்’ என்கிறார்கள். இனி அப்படிக் கேட்பவர்களிடம், ‘மது அருந்துபவர்கள் பிஹாருக்கு வராதீர்கள் என்பேன். மது அருந்துபவர்கள் பீகாருக்கு வர வேண்டிய அவசியமில்லை.

பிஹாருக்கு வெளியில் மது அருந்திவிட்டு உள்ளே வருவதற்கு விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தும் எண்ணமில்லை. மதுவிலக்கை அமல்படுத்திய பிஹார் அரசின் முடிவு பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எத்தனை படித்தவராகவும், அறிவாளியாகவும் இருந்தாலும் அவர் மது அருந்துபவராக இருந்தால், திறமையானவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தச் சமூகத்துக்கு எதிரானவர்களாகவே பார்க்கப்படுவார்கள்” என்று விளாசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE