ஸ்கூட்டரில் திரிந்த கோடீஸ்வரர்!

By காமதேனு

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிலதிபராக அறியப்பட்டிருந்த பியூஷ் ஜெயினின் வீட்டில் 250 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது இந்தியாவை அதிரவைத்தது. கரன்ஸி நோட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்துவரும் நிலையில், அது 280 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.

பியூஷின் சொந்த ஊர், கன்னோஜ் அருகில் உள்ள சுப்பட்டி பகுதி. வெறுமனே ஸ்கூட்டரில் சென்றுவந்துகொண்டிருந்த பியூஷ் ஜெயினிடம், ஒரு குவாலிஸ் காரும் மாருதி காரும் உண்டு. கன்னோஜில் உள்ள அவரது வீட்டிலும், தொழிற்சாலையிலும் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வெள்ளி, சந்தன எண்ணெய், வாசனை திரவியங்கள் போன்றவையும், 300 சாவிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

பியூஷ் ஜெயினின் வீட்டில், 8 கதவுகளும், 16 ஜன்னல்களும் உள்ளன. நிறைய சாவிகள் இருப்பதால், எந்த அலமாரிக்கு எந்தச் சாவி பொருந்தும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கே வருமான வரி அதிகாரிகள் திணறிவிட்டார்களாம். இதையடுத்து, பூட்டை உடைக்கும் தொழில் செய்பவர்களின் உதவியுடனேயே பல அலமாரிகளும், பெட்டிகளும் திறக்கப்பட்டன என்கிறார்கள்.

ஜிஎஸ்டி வரிஏய்ப்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் பியூஷ் ஜெயின், போலி ரசீதுகளைப் பயன்படுத்தி இந்த அளவுக்குப் பணம் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கான்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. பியூஷ் ஜெயினின் மகன் பிரதியூஷ் ஜெயின், உறவினர் மோனு ஜெயின் உள்ளிட்டோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

வாசனை திரவியம் தயாரிப்பு முறையைத் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவர் பியூஷ் ஜெயின். கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் தொழிலை விஸ்தரித்தார். சமீபத்தில் மும்பை, குஜராத் வரை தனது தொழிலை அவர் விரிவுபடுத்தியிருந்தார்.

வெளிப் பார்வைக்கு எளிமையான நபராக இருந்த பியூஷ் ஜெயின், இத்தனைக் கோடிகளுக்கு அதிபதி எனத் தெரிந்ததும் பலருக்கும் ஆச்சரியம்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

இதற்கிடையே, பியூஷ் ஜெயினை முன்வைத்து பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் ஒன்றையொன்று குற்றம்சாட்டிவருகின்றன.

“பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசுகள் (மத்திய அரசு + உத்தர பிரதேச அரசு) முழுமையான ஈடுபாட்டுடன் பணி செய்துவரும் நிலையில், ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும்கூட அவர்களின் (சமாஜ்வாதி கட்சியினர்) வீடுகளின் சுவர்களில் இருந்துகூட கோடிக்கணக்கான கரன்ஸிகள் வந்துகொண்டிருக்கின்றன” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE