15-18 வயதினருக்கு தடுப்பூசி; மூத்தோர்- முன்களப்பணியாளருக்கு பூஸ்டர்: பிரதமர் மோடி அறிவிப்பு

By காமதேனு

15-18 வயதுடைய குழந்தைகளுக்கு ஜன.3 முதல் தடுப்பூசியும், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் இணை நோயுள்ளவர்களுக்கு ஜன.10 முதல் பூஸ்டர் டோஸ் ஆகியவையும் போடப்பட இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலின் மத்தியில் சனி இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஒமைக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியதுடன், அது குறித்து பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவற்றுக்கு அப்பால் அவர் பேசியதன் முக்கிய குறிப்புகள் இங்கே:

#இந்தியாவில் இதுவரை 415 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 115 பேர் குணமடைந்துள்ளனர்.

#நாட்டில் 18 லட்சம் கரோனா படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள், 1.4 லட்சம் ஐசியூ படுக்கைகள், குழந்தைகளுக்கான 90 ஆயிரம் பிரத்யேக படுக்கைகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

#முகக்ககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது என்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.

#தடுப்பூசி திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. மாநிலங்களிடம் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் உள்ளன.

#உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசிஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் மூக்கு வழி தடுப்பூசியும் வர உள்ளது.

#இன்றுடன்(டிச.25), 141 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி தகுதி வயதுடையோரில் 90 சதவீதம் பேர் முதல் டோஸையும், 61 சதவீதம் பேர் 2 டோஸ்களையும் முழுமையாக பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE