மறுவரையறையை ஏற்க மறுக்கும் காஷ்மீர் கட்சிகள்!

By வெ.சந்திரமோகன்

காஷ்மீரில் மீண்டும் கசப்புணர்வு பரவத் தொடங்கியிருக்கிறது. ஜம்முவுக்கு 6, காஷ்மீருக்கு 1 எனக் கூடுதல் சட்டப்பேரவைத் தொகுதிகளை ஏற்படுத்த, தொகுதி மறுவரையறை ஆணையம் பரிந்துரைத்திருப்பது காஷ்மீரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அரசியல் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் முயற்சி என்றே அந்தக் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இவ்விவகாரத்தின் பின்னணி என்ன?

எதிர்ப்புகளைத் தாண்டி...

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் 5-ல் நாடாளுமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகக் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை, 2020 மார்ச் 6-ல் மத்திய அரசு அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான ஆணையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்பிக்களான பரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மஸூதி ஆகியோருடன், ஜம்மு பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய இருவர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஜிதேந்திர சிங் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும்கூட. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா, இந்த ஆணையத்தின் பதவிவழி உறுப்பினர். மெஹ்பூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி இதில் பங்கெடுக்க மறுத்துவிட்டது. கணக்கெடுப்புப் பணிகளுக்காகக் காஷ்மீர் சென்ற தொகுதி வரையறைக் குழுவைச் சந்திக்கவும் மறுத்துவிட்டது.

தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் 2021 ஜூன் முதல் வாரத்திலிருந்து தொடங்கின. ஜூன் 24-ல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசின் அழைப்பின்பேரில் டெல்லியில், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, ‘முதலில் தொகுதி மறுவரையறை, பின்னர் தேர்தல்; அதற்குப் பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று சொன்னார். ஆனால், முதலில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; அதற்குப் பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அப்போதே காஷ்மீர் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. மற்ற மாநிலங்களில் தொகுதி மறுவரையறை பணி, 2026 வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், காஷ்மீரில் மட்டும் ஏன் அது முன்னெடுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பின.

எனினும், எதிர்ப்புகள், விமர்சனங்களையும் தாண்டி தொகுதி மறுவரையறைப் பணிகள் நடைபெற்று, அதற்கான வரைவு அறிக்கை டிசம்பர் 20-ல் வெளியானது. இதற்கான வரைவு அறிக்கையை பரூக் அப்துல்லா உள்ளிட்ட 5 எம்பிக்களிடம், மறுவரையறை ஆணையத்தின் தலைவர் ரஞ்சனா தேசாய் வழங்கினார். காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிக்களும் இந்தப் பரிந்துரையை எதிர்க்கிறார்கள். ஜம்மு பகுதியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் ஆதரிக்கிறார்கள். வரைவு அறிக்கை குறித்த கருத்துகளைத் தெரிவிக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏன் எதிர்க்கப்படுகிறது?

இது நடைமுறைக்கு வந்தால், சட்டப்பேரவையில் ஜம்மு பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37-லிருந்து 43 ஆகும். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 46-லிருந்து 47 ஆக மட்டுமே உயரும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்து ஒருவரை முதல்வராக்கும் சூழல் உருவாகும். லடாக்கையும் சேர்த்து மொத்தம் 90 இடங்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 44 இடங்கள் தேவை. பாஜக இதுவரை 25 இடங்களைக் கடந்ததில்லை. இந்நிலையில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் சட்டப்பேரவை தொகுதிகளை அதிகரிப்பதன் மூலம், இந்துக்களின் வாக்குகளை வைத்து பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவே கருதப்படுகிறது.

மக்கள்தொகைதான் தொகுதி மறுவரையின் அடிப்படையான விஷயம். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பகுதியில் 56.3 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். ஜம்மு பகுதியில் 43.7 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அதேவேளையில், புவியியல் அமைப்பு, நிர்வாக எல்லைகள், தகவல் தொடர்பு வசதிகள், பொதுமக்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதி போன்ற அம்சங்களையும் கருத்தில்கொண்டே தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. எனவே, சட்ட விதிகளைப் பின்பற்றியே தொகுதி மறுவரையைச் செய்திருப்பதாக, ஆணையத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வாதப் பிரதிவாதங்கள்

ஆனால், பாஜகவின் விருப்பப்படியே தொகுதி மறுவரை ஆணையம் செயல்பட்டிருப்பதாக, காஷ்மீர் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றன. ஜம்முவில் உள்ள கதுவா, சம்பா, உதம்பூர், தோடா, கீஷ்த்வர், ரஜோரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒரு சீட் என 6 தொகுதியும், காஷ்மீரில் உள்ள குப்வாராவிலிருந்து ஒரு தொகுதியும் கூடுதலாக உருவாக்கப்படும் எனத் தெரிகிறது. கதுவாவில் 87.61 சதவீதம் பேர் இந்துக்கள். சம்பா மற்றும் உதம்பூரில் முறையே 86.33 சதவீதம் மற்றும் 88.12 சதவீதம் இந்துக்கள் வசிக்கின்றனர். மற்ற 3 தொகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்துக்கள் உள்ளனர்.

மறுபுறம் சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை இருந்த முதல்வர்கள் அனைவரும் முஸ்லிம்கள். குலாம் நபி ஆசாத் தவிர அனைவருமே காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஆகவே, மாநில அரசில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை எனும் எண்ணம் ஜம்மு, லடாக் பகுதி மக்களிடம் உண்டு. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுகள் மனதில் நீண்டகாலமாக அதிருப்தி நிலவுகிறது. இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்வதில் பாஜக தலைவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த வகையில், அவர்கள் விரும்பிய சூழல் உருவாகும் தருணமும் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஏற்கெனவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, காஷ்மீர் ஆட்சி நிர்வாகத்தை ருசித்த பாஜக, இனி தனித்து ஆட்சியமைக்கும் நோக்கில் இதை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

கூடவே, வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இந்து மதத்தைச் சேர்ந்தவரான மன்னர் ஹரி சிங்கும் காஷ்மீரில் இருந்துதான் ஆட்சிசெய்துவந்தார் என காஷ்மீர் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேபோல, ஜம்மு - காஷ்மீரை விடவும் அதிகமான பரப்பளவைக் கொண்ட லடாக்கில் மக்கள்தொகை குறைவு. புவியியல் அமைப்பை ஓர் அளவீடாகக் கொண்டால், லடாக்குக்குத்தானே அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் வாதத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

இதற்கு முன்பு 1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், 1995-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அப்போதும், ஜம்முவுக்குக் கூடுதலாக 5 இடங்களும், காஷ்மீருக்கு 4 இடங்களும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்வாங்காத குப்கார் கூட்டணி

இவ்விஷயத்தில் பாஜகவின் செயல்பாடுகளைக் காஷ்மீர் கட்சிகள் தொடர்ந்து கேள்விக்குட்படுத்துகின்றன. “மறுவரையறை ஆணையத்தின் பணியை எல்லா கட்சிகளும் பாராட்டின. ஆணையம் பின்பற்றிய வழிமுறைகளில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் திருப்தி தெரிவித்தனர்” என ஜிதேந்திர சிங் கூறியபோது, அதைக் கடுமையாக மறுத்த தேசிய மாநாட்டுக் கட்சி, பாரபட்சமான முறையில் தொகுதிகளை வரையறை செய்திருப்பதை எதிர்ப்பதாகவே அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது.

அத்துடன், “இது பிளவுபடுத்தும் முயற்சி. ஜம்மு-காஷ்மீருக்கு இடையிலான பிளவை மேலும் அதிகரித்துவிடும். நாட்டு மக்களிடமிருந்தும் காஷ்மீர் மக்களைத் தனிமைப்படுத்திவிடும். ஜம்மு - காஷ்மீர், லடாக்குக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேச நலனுக்கும் ஊறு விளைவிக்கும்” என்பதுதான் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் குப்கார் அரசியல் கூட்டணியின் கருத்து. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் கனி லோனும் கூறியிருக்கிறார். இவர் குப்கார் கூட்டணியிலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி என்ன?

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், மறுவரையறைப் பணிகள் கூடாது என மறுவரையறை ஆணையத்திடமே எதிர்ப்பு தெரிவித்திருந்தது தேசிய மாநாட்டுக் கட்சி. இப்போது இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஜனவரி 1-ல் ஸ்ரீநகரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் குப்கார் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.

2014-ல், தெலங்கானா தனிமாநிலமாக உருவானபோது, ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி தொகுதிகளை அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (பெருந்தொற்று காரணமாக இந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை) 2026-ல் தேசிய அளவில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நடந்த பின்னர் அதைச் செய்துகொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் விஷயத்தில் மட்டும் அதீத கவனம் செலுத்தப்படுவதாக எழும் விமர்சனங்களைப் புறந்தள்ள முடியாது.

“கிடைக்கும் எல்லா வாய்ப்புகள் மூலமாகவும், நாட்டு மக்கள், அரசியல் கட்சிகளுக்கு எங்கள் நிலையைப் புரியவைக்க முயற்சிக்கிறோம். குறிப்பாக, எங்கள் வலியைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு அதை உணர்த்த முயல்கிறோம்” என தாரிகாமி கூறியிருக்கிறார்.

இந்நிலையில், காஷ்மீர் அரசியல் கட்சிகளுடன் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும். ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகள் அவர்கள்தானே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE