அதிகரிக்கும் ஒமைக்ரான்: பிரதமர் மோடி நாளை ஆலோசனைக் கூட்டம்!

By காமதேனு

இந்தியாவில் நேற்று (டிச.21) ஒமைக்ரான் தொற்றின் எண்ணிக்கை, 200-ஐத் தொட்ட நிலையில், இன்று அது 213 ஆக அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் டெல்லி (57) முதல் இடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (54) இரண்டாவது இடத்திலும் தெலங்கானா (24) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

கர்நாடகம் (19), ராஜஸ்தான்(18), கேரளம் (15), குஜராத் (14), காஷ்மீர் (3) என பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது. உத்தர பிரதேசத்திலும் ஒடிசாவிலும் தலா இருவர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், தமிழகம், ஆந்திரம், சண்டிகர் (ஒன்றியப் பிரதேசம்), மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒமைக்ரானை எதிர்கொள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில், இந்தியாவும் தன் பங்குக்கு வியூகங்கள் வகுக்கத் தொடங்கியிருக்கிறது. போர்க்காலக் கண்காணிப்பு அறைகளை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. கரோனா சோதனைகளை அதிகரிப்பது, கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்டா வைரஸும் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. இன்று இந்தியாவில் புதிதாக 6,317 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று, இந்த எண்ணிக்கை 5,326 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் தொற்று 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை 3,47,58,481 ஆகும். அதேசமயம், கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை 78,190 ஆகப் பதிவாகியிருக்கிறது. இது கடந்த 575 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை.

அமெரிக்காவின் கரோனா தொற்றுகளில் 73 சதவீதம் ஒமைக்ரான் தொற்று என்பது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது. கடந்த வாரம் இது 3 சதவீதமாகத்தான் இருந்தது என்பது ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவுவதைக் காட்டுகிறது.

டெல்டா வைரஸைவிடவும் அதிக வேகத்தில் பரவக்கூடியதும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தாக்கக்கூடியதுமான ஒமைக்ரானை எதிர்கொள்ள இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட தற்காப்பு வழிமுறைகள்தான்.

இந்தச் சூழலில், நாளை (டிச.23) இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி நடத்தவிருக்கிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE