ஆன்லைன் விசாரணைகளில் காணாமல்போகும் கண்ணியம்: நீதிமன்றங்கள் அதிருப்தி

By காமதேனு

இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் ஆன்லைன் வழக்கு விசாரணைகளில் காணாமல் போகும் கண்ணியம் குறித்து, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஆன்லைன் கல்வி, ஆன்லைன் பணிகள் வரிசையில், நீதிமன்ற விசாரணைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற ஆரம்பித்தன. ஆனால் மாண்புமிக்க நீதிமன்றத்தையும், மாட்சிமை பொருந்திய நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் ஆன்லைன் விசாரணைகளின் கோளாறுகள் அரங்கேறின. இவை தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தபோதும் நிலைமை மாறவில்லை. இனியும் ஆன்லைன் வழக்கு விசாரணைகள் தொடர வேண்டுமா என்று நீதிமன்றம் பரிசீலிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

ஆன்லைன் விசாரணைகளில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான சீருடை தொடர்பாக அலட்சியமாகச் செயல்பட்டதற்கு நாடு முழுக்கப் பல நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. அடுத்தபடியாக ஆன்லைன் விசாரணைக்கான அடிப்படை தொழில்நுட்ப மேற்பார்வையின்றி செயல்பட்டதும் வழக்கு விசாரணை செயல்பாடுகளை இழுத்தடிக்கச் செய்தது.

இதன் உச்சமாக, ஆன்லைனில் கேமரா கண் திறந்திருப்பதைக் கூட கவனிக்காது ஒரு வழக்கறிஞர் நடந்துகொண்ட விவகாரம், நேற்று(டிச.21) சென்னை நீதிமன்றத்தைச் சீற்றத்துக்கு உள்ளாக்கியது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, வழக்கறிஞர் ஒருவர் தன் முன்பாக கேமரா ஆன் செய்யப்பட்டிருப்பதை மறந்து, பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இந்த வீடியோ காட்சியை எவரோ சமூக ஊடகங்களில் சுற்றுக்குவிட, நீதிமன்றம் தானாக முன்வந்து இதை வழக்காக எடுத்திருக்கிறது. ஆன்லைனில் விசாரணையின்போது ஏடாகூடமாக இருந்த வழக்கறிஞரை சாடியதோடு, வீடியோ தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று நீதிமன்றத்தைச் சீண்டிய இன்னொரு சம்பவம் அதேநாளில் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் காவல் துறை முன்னாள் உயரதிகாரியான சுமேந்த் சிங் என்பவர், 1994-ல், மூவர் கடத்தப்பட்டு கொலையான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் உள்ளிட்ட 4 போலீஸாருக்கு எதிரான வழக்கு விசாரணை சண்டிகர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளை வாய்ப்பாக்கி உடல்நிலை சரியில்லை என்று பலமுறை நீதிமன்ற விசாரணைகளில் இருந்து இவர் தப்பித்து வந்தார். நீதிமன்றம் தனது பிடியை இறுக்கிய பிறகு, திங்களன்று ஆன்லைனில் ஆஜரானார். ஆனால் அப்போதும் படுக்கையில் இருந்தவாறே நீதிபதிகளிடம் உரையாடினார். உடல்நிலைக் குறைவு என்று காரணம் கூறிய சுமேந்த் சிங், அதற்கான சான்று எதையும் சமர்ப்பிக்கவில்லை.

இதுதொடர்பாக கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், சுமேந்த் சிங்கை எச்சரித்ததோடு, எதிர்வரும் விசாரணைகளில் இவ்வாறு நடந்துகொண்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. கூடவே, ஆன்லைன் விசாரணைகளை மறுபரிசீலனை செய்யம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றமும் இதேபோன்ற ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. ’உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரடியாகவும் நடைபெற்று வரும்போதும் ஆன்லைன் விசாரணைகள் தொடரவேண்டுமா என்பது குறித்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. இத்துடன் ஏடாகூட வழக்கறிஞர் வீடியோ தொடர்பாக, சிபிசிஐடியின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை டிச.23 அன்று தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தைச் சீண்டிய அந்த வழக்கறிஞர் தனது தொழிலை தொடர, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. மேலும் ஆன்லைன் விசாரணைகளில் ஆஜராகும்போது, வழக்கறிஞர்கள் கண்ணியம் மற்றும் மரியாதையைக் கடைபிடிப்பதுடன் உரிய சீருடையிலும் பங்கேற்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE