மத உணர்வுகளைப் புண்படுத்தினால் ஆயுள் தண்டனை?

By எஸ்.சுமன்

பஞ்சாபில் அதிகரிக்கும் கும்பல் கொலைகளைத் தடுக்க, மத உணர்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட அவச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி, அம்மாநில அரசு மத்திய உள்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, ”எல்லை மாநிலமான பஞ்சாபில் சக மதத்தினரின் உணர்வுகளை விஷமிகள் புண்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் சமூக இணக்கம் கெடுவதுடன், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் இவை நீடித்த பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இம்மாதிரி அவச்செயல் புரிவோரை கட்டுப்படுத்துவதற்கான நடப்பு சட்டப்பிரிவில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே விதிக்க முடியும். அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுக்குள் கொண்டுவர இந்த தண்டனைகள் போதாது. எனவே, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் புதிய சட்டமசோதாவை பரிசீலிக்குமாறு கோருகிறோம்” என்று சுக்ஜிந்தர் தெரிவித்துள்ளார்.

அவச்செயல் புரிவோர் மீது கடும் தண்டனை விதிக்கும் 2 சட்ட மசோதாக்களுக்கு, 2018-ல் பஞ்சாப் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு பஞ்சாப் ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டு, தற்போது வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி சீக்கியர்களின் குருகிராந்த் சாஹிப், இந்துக்களின் பகவத்கீதை, இஸ்லாமியரின் குரான், கிறிஸ்துவர்களின் பைபிள் உள்ளிட்ட புனித நூல்களுக்கு சேதம் விளைவிப்பது, அவச்செயல் புரிவது உள்ளிட்ட மத உணர்வுகளைப் புண்படுத்தும் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.

சீக்கியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் புனித நூல் என்பதை வாழும் சீக்கிய மத குருவாகவே பாவிக்கிறார்கள். அதேபோல சீக்கிய கொடி உள்ளிட்ட பிற மத அடையாளங்களையும் வழிபட்டு வருகிறார்கள். டிச.18, 19 நாட்களில் அரங்கேறிய 2 சம்பவங்கள் காரணமாக பஞ்சாப்பில் மீண்டும் அவச்செயல் குற்றங்களும், அதில் ஈடுபடும் விஷமிகளை அடித்துக்கொள்ளும் போக்கும் அதிகரித்துள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் புகுந்த ஒரு நபர், புனித நூல் மற்றும் புனித வாளைக் கைப்பற்ற முயன்றதாக அங்கிருந்தோர் அந்த நபரை அடித்துக் கொன்றனர். அதேபோல ஞாயிறு அதிகாலை குருத்வாரா ஒன்றில் நுழைந்த நபர், சீக்கிய கொடியை சேதப்படுத்த முயன்றதாக அடித்துக்கொல்லப்பட்டார். இவற்றில் முதல் சம்பவத்தில், புனித தலத்தின் மலர்களை எடுக்க முயன்றதை அருகிலிருந்தோர் தவறாகப் புரிந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அது தொடர்பான சிசிடிவி ஆவணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர். 2-வது சம்பவத்தில் குருத்வாராவில் திருட வந்த நபரை, அவச்செயல் குற்றமிழைத்ததாக பொதுமக்கள் அடித்துகொன்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாபில் எழுந்திருக்கும் அவச்செயல் - கும்பல்கொலை போக்குகளும், அது தொடர்பாக வலியுறுத்தப்படும், மத உணர்வுகளைப் புண்படுத்துவோருக்கு எதிரான ஆயுள்தண்டனை மசோதாவும் தேசிய அளவிலும் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. பஞ்சாப் சட்டமசோதா தொடர்பாக மத்திய உள்துறை எடுக்கும் முடிவு, மத உணர்வுகளை புண்படுத்துகிறார்கள் என்று எழுப்பப்படும் பரவலான குற்றச்சாட்டுகள், அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளிலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE