ஐஸ்வர்யா ராய் இப்போது; அனில் அம்பானி எப்போது?

By காமதேனு

ஐஸ்வர்யா ராயிடம் வருமானவரித் துறை 6 மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, பனாமா பேப்பர்ஸ் விவகாரம் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது. 2016-ல் இப்பட்டியல் வெளியானபோதே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹரிஷ் சால்வே, வினோத் அதானி உள்ளிட்ட 500 இந்தியர்கள் மீது வருமானவரித் துறை நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுதான் இந்த விஷயத்தில் அரசு சுறுசுறுப்பு காட்டுகிறது.

2005-ல் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் ஆமிக் பார்ட்னர்ஸ் எனும் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டிருந்தது, பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்தது. அந்நிறுவனத்தின் இயக்குநர்களின் பெயர்ப் பட்டியலில் ஐஸ்வர்யா ராய், அவரது பெற்றோர், சகோதரர் ஆதித்யா ராய் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றன. அந்த நிறுவனத்துடன் என்ன தொடர்பு என அமலாக்கத் துறை ஐஸ்வர்யா ராயிடம் தற்போது கேள்வி எழுப்பியிருக்கிறது.

மறுபுறம், 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பனாமா பேப்பர்ஸில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்தப்படும்போது, சமீபத்தில் வெளியான பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்த அனில் அம்பானியிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அனில் அம்பானி

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் அமிதாப் பச்சனின் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தபோதும், பாஜக அரசு பெரிய அளவில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக, குஜராத் மாநிலத்தின் பிராண்ட் அம்பாஸடராக அமிதாப்பைத்தான் தேர்ந்தெடுத்தது பாஜக.

பிரிட்டனில் திவால் ஆனதாக அறிவித்த அனில் அம்பானி, 18 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக பண்டோரா ஆவணங்களை ஆய்வு செய்த ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தெரிவித்திருந்தது. ரிலையன்ஸ் ஏ.டி.ஏ. நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவருடைய பிரதிநிதிகள் ஜெர்சி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் அந்நிறுவனங்களை நடத்திவருவதாகத் தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்விகள் எழுந்தன. எனினும், முதலில் பனாமா பேப்பர்ஸ் விஷயத்தில் கவனம் செலுத்துகிறது அரசு.

அகிலேஷ் யாதவ்

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன் பாஜகவை நேற்று கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கு, ஐஸ்வர்யா ராய் மீதான விசாரணை ஒரு காரணமா என விவாதிக்கப்படுகிறது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் சூழலில், சமாஜ்வாதி கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். இதை விமர்சித்துவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தத் தேர்தலில் வருமானவரித் துறையும் போட்டியிடுகிறது போலும் எனக் கிண்டல் செய்திருக்கிறார்.

வருமானவரித் துறையினரின் வாகனத்தில், ‘தேர்தல் பணிகள்’ எனும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதாக வரையப்பட்ட கேலிச் சித்திரத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE