குளிரில் நடுங்கும் தலைநகரம்!

By காமதேனு

டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவருகிறது. தெலங்கானாவின் சில பகுதிகளிலும் குளிர்க்காற்று வீசிவருகிறது. ராஜஸ்தானின் சுரு நகரில் மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. ஸ்ரீநகரில் மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று (டிச.20) டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருக்கிறது. நகரின் லோதி ரோடு பகுதியில் உள்ள பிராந்திய வானிலை ஆய்வு மையம் இதைத் தெரிவித்திருக்கிறது. நேற்று (டிச.19) டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.6 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரியாகவும் பதிவானது.

குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகச் செல்வதை, குளிர்க்காற்று எனக் குறிப்பிடுகிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அடுத்த நில நாட்களுக்குப் பல்வேறு மாநிலங்களில் குளிர்க் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

டெல்லியில், கடந்த ஆண்டு இறுதியிலும் கடும் குளிர் நிலவியது. 2021 புத்தாண்டு தினத்தில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் அதுதான் மிகவும் குளிரான புத்தாண்டு தினம். 2006 ஜனவரி 8-ல் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.2 டிகிரி பதிவானது.

குளிர்காலங்களில், சாலைகளிலும் வீதிகளிலும் தங்கியிருப்பவர்களும் விளிம்புநிலை மக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். டெல்லியில், அவர்களுக்காகத் தற்காலிகத் தங்குமிடங்கள் உண்டு. எனினும், அங்கு தங்கியிருப்பவர்களுக்கும் போதிய எண்ணிக்கையில் கம்பளி, போர்வை, படுக்கை விரிப்புகள் இல்லாமல் சிரமத்துக்குள்ளாவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE