கொல்கத்தா மாநாகராட்சித் தேர்தலில் முறைகேடு: பாஜக புகார்

By காமதேனு

நேற்று (டிச.19) நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் முறைகேடுகளும் வன்முறையும் நடந்ததாக, மேற்கு வங்க எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.21) நடைபெறும் நிலையில், இந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்குமாறும் அக்கட்சியினர் கோரியிருக்கின்றனர்.

கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததால் வாக்குப் பதிவை மீண்டும் நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜகவினர், நேற்று மாலை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

மேலும், பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து ஆளுநர் ஜக்தீப் தங்கரைச் சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுத்த சுவேந்து அதிகாரி, இந்தத் தேர்தலில் முறைகேடுகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகவும், பாஜக தேர்தல் முகவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகக் கொல்கத்தா போலீஸார் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தார். இந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மம்தா பானர்ஜியின் அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என சுவந்து அதிகாரி தலைமையிலான பாஜகவினரிடம் ஆளுநர் தெரிவித்ததாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுவேந்து அதிகாரி, "பாஜக தேர்தல் முகவர்கள் தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையர் முதுகெலும்பில்லாதவர் என்றும் அவர் விமர்சித்தார்.

இதற்கிடையே, சுவேந்து அதிகாரி மீது காவல் துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சுவேந்து அதிகாரியின் வீட்டின் முன்னர் குவிந்த காவல் துறையினர், வெளியே செல்லவிடாமல் அவரைத் தடுத்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்தத் தகவல் ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE