அந்தமான் நிக்கோபார்: தடுப்பூசி இலக்கில் இந்திய சாதனை

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்தியில் முதலாவதாக, 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது அந்தமான் நிக்கோபார் தீவுகள்.

இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கரோனா பரவலின் உச்சத்தில் சிக்கியுள்ளன. கூடுதல் சோதனையாக கரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தடுப்பூசியை மட்டுமே கரோனா தடுப்புக்கான பிரதான வழியாக உலக நாடுகள் நம்பியுள்ளன.

மற்றுமொரு அலைபரவ வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கைகளால் இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கான பணிகள் துரிதம் பெற்றுள்ளன. கரோனா தடுப்பூசி இலக்கை அடைய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுமக்களின் அலட்சியம் மற்றும் அரசு எந்திரந்தின் நடைமுறை சிக்கல்களால் அந்த இலக்கு இன்னமும் எட்டப்படாமல் இருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கரோனா தடுப்பூசி வழங்கலில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ள 2.86 லட்சம் பேரும் அங்கு கோவிஷீட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் அந்தமான் நிக்கோபாரின் தடுப்பூசி இலக்கின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தென்படலாம். ஆனால் நடைமுறையில் இந்த 2.86 லட்சம் மக்களை தேடிப்பிடித்து தடுப்பூசி செலுத்தியது மிகவும் சவாலான பணியாகும். அந்தமான் நிக்கோபார் என்பது மொத்தம் 836 தீவுகளை உள்ளடக்கிய தீவு தொகுப்பாகும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

சுமார் 800கிமீ தொலைவுக்கு வடக்கு-தெற்காக சிதறிக்கிடக்கும், இந்த தீவுகளின் மத்தியில் ஆங்காங்கே வாழும் மக்களை வரவழைத்தோ, தேடிச்சென்றோ தடுப்பூசி போட்டாக வேண்டும். இதற்கு கடற்பரப்பு, மலைகள், அடர் காடுகள் என்றும் கடந்து சென்றாக வேண்டும். இத்தனை தடைகள் தாண்டி அந்தமான் நிக்கோபார் தனது இலக்கை எட்டியுள்ளது.

இதற்கிடையே அந்தமான் நிக்கோபாரில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நபர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மொத்தம் 2 பேர் மட்டுமே அங்கு கரோனா தொற்றாளர்களாக தற்போது உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE