வீடு திரும்பும் விவசாயிகள்... போராட்டக் களத்திலேயே தங்கிவிட்ட முதியவர்!

By காமதேனு

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்பட்டுவிட்ட நிலையில், 90 வயது விவசாயி கந்தர்வ சிங் மட்டும் இன்னமும் போராட்டக் களத்திலேயே தங்கியிருக்கிறார்.

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, உலகின் மிக நீண்ட ஜனநாயகப் போராட்டமாகக் கருதப்படும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றத்திலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்ட நிலையில், 380 நாட்களுக்கும் மேலாகப் போராடிவந்த விவசாயிகள் வீடுதிரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி - உத்தர பிரதேசம் எல்லையில் உள்ள காஜிப்பூர் பகுதியிலிருந்து, ராகேஷ் திகைத் தலைமையிலான விவசாயிகள் நேற்று (டிச.15) சோரம் சென்று சேர்ந்தனர். அங்கிருந்து, முஸாஃபர்நகர் அருகில் உள்ள தனது சொந்த ஊரான சிசோலி கிராமத்தை ராகேஷ் திகைத் சென்றடைந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“அரசுக்கு எதிரான போராடுவது, தேசத்துக்கு எதிராகப் போராடுவது அல்ல என்பதை விவசாயிகள் இயக்கம் உணர்த்திவிட்டது. விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று கூறியிருக்கும் ராகேஷ் திகைத், “மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் எனும் எங்கள் கோரிக்கை இன்னமும் நிலுவையில் இருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காஜிப்பூரில் ராகேஷ் திகைத் உள்ளிட்ட விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இருந்த முதியவர் கந்தர்வ சிங் மட்டும், வீடு திரும்ப மனமில்லாமல் அங்கேயே தங்கியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் ஈடாவா மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வ சிங், “என் குடும்பத்தினர் (விவசாயிகள்) என்னைவிட்டுச் செல்கிறார்கள். எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் ஊருக்குத் திரும்பப்போவதில்லை” என்று கூறியிருக்கிறார். அவரது மகன் தேவேந்திர சிங், அவருக்குத் துணையாக அங்கேயே தங்கியிருக்கிறார்.

போராட்டக் களத்தில் இத்தனை நாட்கள் சக விவசாயிகளுடன் இணைந்து தங்கியிருந்த நாட்களின் நினைவுடன் அங்கேயே அவர் தங்கியிருப்பார் எனச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE