முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவரானார் எம்.எம்.நரவணே!

By காமதேனு

முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவணே நேற்று (டிச.15) பொறுப்பேற்றுக்கொண்டார். முப்படைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததையடுத்து, அந்தப் பதவி காலியாகியிருக்கிறது. புதிய முப்படைத் தளபதி தேர்ந்தெடுக்கப்படும்வரை நரவணே, முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நீடிப்பார்.

ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத், 2019-ல் முப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் எம்.எம்.நரவணே. 2021 செப்.30-ல், இந்திய விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் நவ.30-ல் பொறுப்பேற்றிருந்தார். தரைப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளில் மூத்த தளபதி எனும் முறையில் நரவணேக்கு இந்தப் பதவி வழங்கப்படுகிறது.

முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர் எனும் பதவி, 1947-ல் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சருக்கு ராணுவ விவகாரங்கள் தொடர்பான எல்லா ஆலோசனைகளையும் வழங்கும் பொறுப்பு முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவருக்கு உண்டு.

புதிய முப்படைத் தளபதியாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் எனும் கேள்விக்கு நரவணேயின் பெயர்தான் இதுவரை ஊகமாக முன்வைக்கப்படுகிறது. எனினும், இவ்விஷயத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும்தான் இறுதி முடிவெடுப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE