வருண் சிங்: வீரம் செறிந்த விமானி!

By சந்தனார்

பெங்களூருவின் கமாண்ட் மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சையில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்; எப்படியும் உயிருடன் மீண்டுவிடுவார் என நாடே காத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரைப் பற்றிய செய்திகள் அனைத்திலும் வீரமும் தேசப்பற்றும் நிறைந்திருப்பதை உணர முடியும்.

உத்தர பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் அருகே உள்ள கன்ஹவுலி கிராமத்தைச் சேர்ந்தவர் வருண் சிங். அவரது தந்தை கர்னல் கே.பி.சிங்கும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வருண் சிங்கின் சகோதரர் லெப்டினன்ட் கமாண்டர் தனுஜ் சிங்கும் விமானப் படையில் பணியாற்றிவருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகிலேஷ் பிரதாப் சிங், வருண் சிங்கின் உறவினர்.

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ) பயின்ற வருண் சிங், 2004-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்றார். ஃப்ளையிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸிலும் பல சவாலான சாகசங்களைப் புரிந்து விருதுகள் பெற்றவர் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிவந்தார் வருண் சிங். முப்படைத் தளபதி பிபின் ராவத்தை சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு அழைத்துவந்து அவருக்குத் துணையாக இருக்கும் பணி வருண் சிங்குக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதை அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பதற்காக சூலூரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரையும் வருண் சிங் அழைத்துவந்துகொண்டிருந்த நேரத்தில்தான் அந்தக் கோர விபத்து ஏற்பட்டது.

அதில், பிபின் ராவத் உட்பட 13 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள கமாண்ட் விமானப் படை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட வருண் சிங், தீக்காயங்களுடன் போராடி இன்று நம்மைவிட்டு மறைந்திருக்கிறார்.

விங் கமாண்டராக இருந்தபோது வருண் சிங் செய்த வீர சாகசம் இன்று வரை போற்றப்படுகிறது. 2020 அக்டோபரில் எல்.சி.ஏ தேஜாஸ் போர் விமானத்தை அவர் நெருக்கடியான சூழலில் பத்திரமாகத் தரையிறக்கினார். 10,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் கோளாறு ஏற்பட்டது. எனினும், தீரத்துடன் செயல்பட்ட வருண் சிங், விமானத்தைத் தரையிறக்கினார். அதில் அவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் பிழைத்தனர். விமானி என்பதால், அவரால் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பியிருக்க முடியும். ஆனால், விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் காக்க வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில், தன் உயிரையும் பணயம் வைத்து அதைச் செய்துகாட்டினார்.

அவரது அந்தத் துணிச்சலைப் பாராட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘ஷவுரிய சக்ரா’ விருதை அளித்து வருண் சிங்கைக் கவரவித்தார். ஹரியாணாவில், தான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அந்தச் செய்தியை, பெருமிதத்துடனும் பணிவுடனும் கடிதமாக எழுதி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் வருண் சிங். அதில் தனது வாழ்க்கையைச் செதுக்க உதவிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகம் தரும் வார்த்தைகளையும் எழுதியிருந்தார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது நடந்த விஷயங்கள் குறித்து, உலகுக்குத் தெரிவிக்கக்கூடியவராக வருண் சிங் மட்டுமே இருந்தார். இப்போது அவர் மறைந்திருப்பது அந்த விபத்து குறித்த விசாரணைகளுக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE