கேப்டன் வருண் சிங்கின் சேவை ஒருபோதும் மறக்கப்படாது!

By காமதேனு

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட க்ரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலமானார்.

பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வருண் சிங்குக்கு உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

“டிச. 8-ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த, துணிச்சல்மிக்க குரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலை மரணமடைந்தது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு இந்திய விமானப் படை ஆறுதல் தெரிவிப்பதுடன் உறுதியாகத் துணை நிற்கிறது” என்று இந்திய விமானப் படை அறிவித்திருக்கிறது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் பிரதமர் மோடி, “குரூப் கேப்டன் வருண் சிங், பெருமை, வீரம், மிகத் திறன்வாய்ந்த தொழில்முறை ஆகியவற்றுடன் தேசத்துக்குச் சேவையாற்றினார். அவரது மறைவால் மிகுந்த துயரமடைந்திருக்கிறேன். நாட்டுக்கு அவர் ஆற்றிய வளமான சேவை ஒருபோதும் மறக்கப்படாது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE