அவசர மருத்துவ உதவிக்காக நெடுஞ்சாலையை ஒட்டி ஹெலிபேட்!

By காமதேனு

விபத்துக்கால அவசர உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக, பிரதான நெடுஞ்சாலைகளை ஒட்டி, ஆங்காங்கே ஹெலிபேட் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் நிகழும் கோர விபத்துகளில் , கோல்டன் ஹவர் எனப்படும் தங்கத் தருணத்தில் அவசரகால மருத்துவ உதவியை கிடைக்கச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்த்துவிடலாம். ஆனால் விபத்து நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான நெருக்கடியான சாலைப் பயணமும், நீளும் தொலைவும் நேரமுமே உயிரிழப்புகளுக்கு காரணமாகி விடுகிறது. இந்த குறையை போக்க, நெடுஞ்சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல வசதியான ஹெலிபேடுகள் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வளர்ந்த நாடுகளில் இந்த ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலமும், ஹெலிகாப்டர் உபயோகத்தை பரவலாக்கவும் விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட மாநகரங்களின் பிரதான நெடுஞ்சாலைகளுக்கு ஹெலிபேட் வசதியை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நிகழ்விடத்திலிருந்து, இந்த ஹெலிபேட் அமைந்திருக்கும் குறுகிய தொலைவுக்கு மட்டுமே சாலைப் பயணம் மேற்கொண்டால் போதும், மீதமுள்ள மருத்துவமனைக்கான நீண்ட தொலைவுகளை ஹெலிகாப்டர்கள் தடையின்றி கடக்க உதவும்.

இது குறித்து இன்று(டிச.14) விளக்கமளித்திருக்கும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ”சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த நெடுஞ்சாலை ஹெலிபேட் வசதிகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

நாட்டில் ஹெலிகாப்டர் உபயோகத்தை பரவலாக்குவதன் மூலம் அதன் அனுகூலங்களை முழுவதுமாக அடையவும், அதையொட்டிய பலதுறை வளர்ச்சிகளை பெறவும் நாடு தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலை ஹெலிபேட் யோசனைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதும், மாநகரங்களுக்கு அடுத்தபடியாக நாடு முழுக்க அவற்றை நடைமுறைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE