காமெடி நிகழ்ச்சி நடத்த ராகுலை அழைக்க வேண்டியதுதானே?

By காமதேனு

நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துமாறு ஸ்டாண்ட்-அப் காமெடியன்களான குணால் காம்ரா, முனாவர் ஃபாரூக்கி ஆகியோருக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு, மத்திய பிரதேச உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், பெங்களூருவில் முனாவர் ஃபாரூக்கி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில், பெங்களூருவில் நடக்கவிருந்த குணால் காம்ராவின் நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டது.

குணால் காம்ரா

இதையடுத்து மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, அவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. போபால் மட்டுமல்ல, “மத்திய பிரதேசத்தில் எங்குமே இந்த நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம்” என அம்மாநில பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் சர்மா போன்றோர் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நரோத்தம் மிஸ்ராவும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “இனி இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் யாரேனும் நிகழ்ச்சி நடத்தினால் அவர்களுக்குச் சிறைவாசம்தான் கிடைக்கும். எந்தச் சூழலிலும் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியிருக்கும் அவர், “நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால், ராகுல் காந்தியை ஏன் திக்விஜய் சிங் அழைக்கக்கூடாது?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முனாவர் ஃபாரூக்கி

மோடியின் வாராணசி பயணம் குறித்து விமர்சித்த, அகிலேஷ் யாதவையும் விமர்சித்திருக்கிறார் நரோத்தம் மிஸ்ரா. ‘கடைசிக் காலத்தைக் கழிக்க ஏற்றம் இடம் காசிதான்‘ என மோடியை அகிலேஷ் கிண்டல் செய்திருப்பதைப் பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் நரோத்தம் மிஸ்ரா, “அகிலேஷ் ஜி தானாக இப்படிப் பேசவில்லை. அவருக்குள் இருக்கும் அவுரங்கசீபின் ஆன்மாதான் இப்படியெல்லாம் அவரைப் பேசவைக்கிறது” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE