கனவு மெய்ப்பட்டதில் மோடி மகிழ்ச்சி!

By எஸ்.சுமன்

வாராணசி வளர்ச்சிப் பணிகள் குறித்து, பிரதமர் மோடி நேற்று நள்ளிரவுக்கு அப்பாலும் நீண்ட நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில், 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆன்மிகம், வளர்ச்சி திட்டங்கள், மாநிலத்தின் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என பல அம்சங்கள் மோடியின் பயணத்தில் பொதிந்திருந்தன.

முதல் நாளான நேற்று(டிச.13), காசி விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய விரிவாக்கப்பட்ட வளாகம் மற்றும் 23 கட்டிடங்களை மோடி திறந்து வைத்தார். கங்கையிலிருந்து கோயிலை அடைவதற்கான புதிய வழித்தடம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான புதிய வசதிகள் ஆகியவற்றையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நள்ளிரவு ஆய்வு

தொடர்ந்து நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், வாராணசி தொகுதியின் இதர வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பிரதமரின் நள்ளிரவு ஆய்வுப் பணிகள் குறித்து அவரது ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை அப்டேட்டுகள் வெளியாகி ஆச்சரியம் தந்தன.

முதல்கட்டமாக பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடனான பிரதமரின் சந்திப்பு அமைந்தது. அந்த அமர்வு, சுமார் 6 மணி நேரத்துக்கும் மேல் நீண்டதாக அவர்கள் பின்னர் தெரிவித்தனர்.

பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் மோடி

சொந்தத் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை, முகலாயர் படையெடுப்புக்கு முந்தைய காலத்தின் புராதன மெருகுக்கு மீட்பது மோடியின் கனவுத் திட்டமாக இருந்தது. அதன் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்ததில், மோடி மிகவும் மகிழ்வாகத் தென்பட்டார். இந்த மகிழ்ச்சியும் நிறைவும் அவரது, பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் சந்திப்பிலும் வெளிப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக சரிவு கண்டதுடன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது போன்ற பின்வாங்கல் நடவடிக்கைகளால் வெகுமக்கள் அபிமானத்தை இழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. கட்சியினர் மத்தியில் சோர்வு எழ அவை வாய்ப்பாகும் என்ற கவலையும் பாஜக தலைவர்கள் இடையே எழுந்தது.

அந்தக் கவலையையும், தொய்வையும் அகற்றும் நோக்கில், மோடியின் வாராணசிப் பயணம் அமைந்திருந்தது. தனது நம்பிக்கையை பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுக்கு கடத்தும் வகையில் மோடி உரையாற்றினார். தொடர்ந்து நள்ளிரவில், அவர்கள் புடைசூழ கோயில் வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர், பனராஸ் ரயில் நிலையத்தில் நிறைவடைந்துள்ள வளர்ச்சிப் பணிகளை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு 1.13 என்று ஒளிர்ந்த ரயில் நிலைய கடிகாரத்தின்கீழ் நின்று மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படம் அதிகாலை முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE