தமிழகத்தில் பழங்குடியினர் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரிக்கும்கீழ் சரிவு!

By கரு.முத்து

பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் இந்திய சராசரியை விட, தமிழ்நாட்டின் சராசரி குறைவாக இருப்பதாக இன்று (டிச. 13) நாடாளுமன்றத்தில் விசிக உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு பதிலளித்தது. இன்று ரவிக்குமார் இதுகுறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய பழங்குடியினர் நலத் துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் சருட்டா எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

ரவிக்குமார்

​​பழங்குடியினப் பெண்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, 2020-ம் ஆண்டில் பழங்குடியின (ST ) கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவு விவரம் என்ன?, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டிலும் பழங்குடி மக்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) என்ன?, GER-ஐ அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் சிறப்பு முயற்சிகளை எடுக்கிறதா?, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்ற கேள்விகளை ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு, பழங்குடியினர் நலத் துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் சருட்டா அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், ‘அட்டவணையில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அனைத்திந்திய அளவில் பழங்குடியின ஆண்களின் படிப்பறிவு 59% ஆக இருக்கிறது, பெண்களின் படிப்பறிவு 49.4% ஆக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் இருக்கிறது. அதாவது, ஆண் கல்வியில் 4.7 சதவீதமும் பெண் கல்வியில் 2.6 சதவீதமும் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி காமதேனு இணையதள செய்திப் பிரிவிடம் பேசிய ரவிக்குமார், “பொதுவாக படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில், பழங்குடியினர் கல்வியறிவு நிலை மட்டும் இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு சதவீதத்தை உயர்த்த தமிழக முதல்வர் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE