352 வருடங்களுக்கு முந்தைய நிலையில் காசி விஸ்வநாதர் கோயில்: 33 மாதங்களில் சாதித்த மோடி!

By ஆர். ஷபிமுன்னா

33 மாதங்களில். சுமார் 352 வருடங்களுக்கு முன்பு இருந்த தோற்றப் பொலிவுக்கு மாறி இருக்கிறது காசி விஸ்வநாதர் கோயில். பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் வளாகத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார்.

உத்தர பிரதேசத்தின் ஆன்மிக நகரமான வாராணசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இங்குள்ள புனித நதியான கங்கையில் நீராடிவிட்டு, காசிவிஸ்வநாதரை தரிசிப்பதே சிவபக்தர்களின் வேண்டுதலாக இருக்கும். ஆனால், கங்கையில் நீராடச் செல்வதற்கும் அங்கிருந்து மீண்டும் தரிசனத்துக்கு வருவதற்கும் சரியான இடவசதி இல்லாமல் கடைகள் உள்ளிட்ட வளாகங்கள் வழிகளை ஆக்கிரமித்திருந்தன. இதனால் வாராணசிக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை மீண்டும் எடுத்துக்கட்டும் போது, குறுகலான பாதை அமைப்புகளுடன் அமைந்துவிட்டதும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், இக் கோயில் வளாகத்தை அவுரங்கசீப் காலத்துக்கு முந்தைய நிலையில் பழையபடி கட்டிமுடிக்க வேண்டும் என்பது வாராணசி தொகுதி எம்பியான பிரதமர் மோடியின் முக்கிய திட்டமாக இருந்தது.

இந்நிலையில், 2019 மார்ச் 8-ம் தேதி, காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை மறு புனரமைப்பு செய்யும் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டினார் மோடி. அவரது கனவு திட்டமான இதற்கு சுமார் 900 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாரானது.

சீரமைப்புப் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக வாராணசி பற்றிய வரலாற்று நூல்கள், தொல்லியல் அறிக்கைகளைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே புதிய கட்டுமானப் பணிக்கு வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இதன் கட்டுமானப் பணிகளில் சுமார் 300 பொறியாளர்கள் தலைமையில், சுமார் 2,600 கட்டுமானப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 33 மாதங்களில் தீவிரமாகப் பணியாற்றி, 5.25 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலய கட்டிடப் பணியை முடித்துள்ளனர். இந்த வளாகத்தில் 24 கட்டிடங்களும், சிறிதும் பெரிதுமான 27 கோயில்களும் அமைந்துள்ளன.

இரண்டு பாகங்களான வளாகம்

கோயில் வளாகம் தற்போது 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பகுதியான காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் சிவப்புக் கற்களால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4 பெரிய வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பாதைகளில் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இப்பாதையின் வழிநெடுக, காசியின் வரலாற்றுச் சிறப்புகளை சித்தரிக்கும் தகவல்களைக் கொண்ட 22 கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கான வசதிகள்

மற்றொரு வளாகத்தினுள் 24 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் முமுக் ஷாபவன், படக்கண்காட்சி அரங்கு, சிற்றுண்டி விடுதிகள், பக்தர்களுக்கான ஓய்வு விடுதி உள்ளிட்டவை உள்ளன. இந்தப் புதிய வளாகத்தை கட்டுவதற்காக அந்தப் பகுதியில் இருந்த சுமார் 400 குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கே வசித்தவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு வசித்த சுமார் 1,400 பேருக்கு அரசின் சார்பில் மறுவாழ்வுத் திட்டங்களும், நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளன.

வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் நாட்டின் பழம்பெரும் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகும். அதனால் இந்த ஆலயத்துக்கு ஆன்மிகவாதிகள் அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகும் இடமாகவும் காசி இருக்கிறது.

சவாலாக ஏற்ற பிரதமர் மோடி

அமைதியின் சின்னமாகவும், மதநல்லிணக்க நகரமாகவும் வாராணசி கருதப்படுகிறது. சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர், கோஸ்வாமி துளசிதாஸ், மகரிஷி தயானந்த் சரஸ்வதி, குருநானக் உள்ளிட்டப் பலரும் இங்கு வருகை புரிந்த வரலாறு உண்டு. எனினும், இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரை புதுப் பொலிவுடன் மாற்ற இதுவரை எந்த அரசும் முன்வந்ததில்லை. ஆனால், இந்தப் பிரச்சினையை சவாலாக எடுத்துக்கொண்டு நினைத்த காரியத்தை நினைத்தபடியே முடித்திருக்கிறார் பிரதமர் மோடி.

அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்ட கோயில்

352 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக் கோயில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. கடைசியாக, தற்போதைய மத்தியப் பிரதேசப் பகுதியை ஆண்ட, ராணி அகில்யாபாய் ஹோல்கர் என்பவர் இக்கோயிலை புனரமைத்திருக்கிறார். அவருக்குப் பின், இப்போது தான் இத்தனை பெரிய பொலிவு கண்டிருக்கிறது இக் கோயில்.

இக்கோயிலின் 3 கோபுரங்களில் இரண்டுக்கு, 1839-ல் பஞ்சாபின் கேசரி மகாராஜாவான ரஞ்சித்சிங் தங்கக்கவசம் அமைத்தார். மூன்றாவது கோபுரத்துக்கு தங்கக் கவசம் அமைக்கும் முயற்சியில், உபியை ஆளும் பாஜக அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் புனரமைப்புப் பணிகளில் சுமார் 90 சதவீத பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரூ.399 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கோயில் வளாகப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார். எஞ்சிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE