“உங்கள் அதிருப்தி புரிகிறது” - சுப்ரியா சுலே மீது புனே எம்.பி. சாடல்

By KU BUREAU

புனே: "என்னால் உங்களுடைய அதிருப்தியை புரிந்து கொள்ள முடிகிறது" என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேவை புனேவின் எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான முரளிதர் மொஹேல் சாடியுள்ளார். புனேவுக்கு கிடைத்திருக்கும் அமைச்சர் பொறுப்பு ஒப்பந்ததாரர்களை விட புனே மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற விமர்சனத்துக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

புனேவின் முன்னாள் மேயரான முரளிதர் மொஹோல் மோடி 3.0 அமைச்சரவையில் சிவில் விமான போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்பு துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மொஹோலுக்கு கேபினேட் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறித்து பாராமதி தொகுதியின் என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே திங்கள்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "புனேவுக்கு கேபினேட் அமைச்சர் பொறுப்பு கிடைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அது ஒப்பந்தக்காரர்களை விட புனேவாசிகளுக்கு பயனளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

சுலேவின் இந்தப் பேச்சுக்கு செவ்வாய்க்கிழமை முரளிதர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுடைய (சுலே) அதிருப்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னைப் போன்ற சாதாரண கட்சிக்காரனுக்கு அமைச்சராக கிடைத்திருக்கும் வாய்ப்பை உங்களைப் போன்ற தனவந்தர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "ஒப்பந்ததாரர்களைப் பொறுத்த வரையில், யார் அவர்களை வளர்த்தார்கள், யார் அவர்களை பெரியாளாக்கினார்கள், மிகப் பெரிய ஒப்பந்ததார்களின் நண்பர்கள் யார் என்று ஒட்டுமொத்த புனே மற்றும் மகாராஷ்டிராவுக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE