திறந்தவெளி தொழுகைகளை பொறுத்துக்கொள்ள முடியாது: ஹரியாணா முதல்வர் கட்டார் காட்டம்

By எஸ்.சுமன்

ஹரியாணா முதல்வரான மனோகர் லால் கட்டார், ‘திறந்தவெளி தொழுகைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. பூஜையோ, தொழுகையோ அதற்கென இருக்கும் வழிபாட்டுத் தலங்களிலோ, தனிப்பட்ட வீடுகளிலோ மேற்கொள்ளப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாநில முதல்வராக, ஆஎஸ்எஸ் வார்ப்பான மனோகர் லால் கட்டார் பதவி வகிக்கிறார். கடந்த சில மாதங்களாக குருகிராம் நகரில் திறந்தவெளிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு இந்து வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வாறு தொழுகை நடக்கும் இடங்களில் கூட்டமாகச் சென்று முழக்கமிட்டு வருகின்றனர். சிலர் அங்கே கூடி கோவர்தன் பூஜை செய்யவும் ஆரம்பித்தனர்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

இவை தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் எழுந்தன. நேற்றும்(டிச.10) அம்மாதிரியான இடங்களில் பதட்டம் நிலவியதை அடுத்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநில முதல்வரான மனோகர் லால் கட்டார், ”வக்பு வாரிய இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுகிறேன். பூஜை மற்றும் தொழுகையை அதற்கென இருக்கும் வழிபாட்டு மையங்களில் மேற்கொள்ளட்டும். யாருக்கும் அதனால் பிரச்சினை இருக்கப்போவதில்லை. தொழுகையும் அதற்கான இடங்களில் மட்டுமே நடக்கட்டும். திறந்தவெளிகளில் தொழுகை நடத்துவது தேவையற்ற பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. மனிதர்களின் உரிமைகளில் தலையிடுவதாக இல்லை. அதேவேளை, வலிய ஒன்றைச் செய்ய முன்வரும்போது, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

குருகிராம் நகரில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த 37 இடங்களில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை அடுத்து 8 இடங்களுக்கான அனுமதியை, நவம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாகச் சில இடங்களில் பிரச்சினை உருவானபோது, சீக்கிய குருத்வாராக்கள் கூட்டமைப்பு தங்கள் இடங்களில் தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு கதவுகளைத் திறந்துவிட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE