இலங்கைத் தமிழர் குடியுரிமை: மத்திய அரசின் பதில் அதிர்ச்சியளிக்கிறது

By முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதுபற்றி, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நான் இதுகுறித்து சில கேள்விகளை நாடாளுமன்றத்தில் இன்று (டிச.7) எழுப்பி இருந்தேன். அதற்கு எழுத்துபூர்வமாக உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில்களை அளித்துள்ளார். அந்தக் கேள்விகளும், அதற்கான பதில்களும்..,

கேள்வி : தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் அல்லலுறும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடையை உயர்த்தி வழங்கும் திட்டம் எதுவும் உள்ளதா ? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதற்கான காரணங்களை விளக்குக

பதில் : இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடை அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது.

கேள்வி : அகதிகளுக்கென வீடுகளைக் கட்டித்தரும் திட்டம் அரசிடம் இருக்கிறதா?

பதில் : தமிழ்நாடுஅரசு அகதிகளுக்கென 7,469 வீடுகளைக் கட்டித் தருவது என்று முடிவு செய்துள்ளது.

கேள்வி : இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடை உள்ளிட்ட வசதிகளின் விவரங்களைத் தருக.

பதில் : பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கான வசதிகள் அந்தந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுடைய தேவை, அவர்கள் வசிக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. எனவே, பணக் கொடை உள்ளிட்ட வசதிகளை ஒன்றோடொன்று ஒப்பிட முடியாது.

கேள்வி : அகதிகளின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டம் எதுவும் உள்ளதா?

பதில் : தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அகதிக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்படுகிறது.

கேள்வி : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது? அதன் விவரங்களைத் தருக.

பதில் : 1987-ம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்தான ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் குடியுரிமை தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை.

என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இலங்கையில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்களை இந்தியாவில் மறுகுடியமர்த்தம் செய்வது குறித்து, ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் பிரிவு 2.16 (d) அதைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறது.

“ The Government of India will expedite repatriation from Sri Lanka of Indian citizens to India who are resident here, concurrently with the repatriation of Sri Lankan refugees from Tamil Nadu.”

“ தமிழ்நாட்டிலிருக்கும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதுடன், இலங்கையில் வசிக்கும் இந்தியக் குடிமக்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துக் கொள்வதை இந்திய அரசு துரிதப்படுத்தும்” என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்கும்போது, அப்படியான அம்சம் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் சொல்லியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE