சிவப்பு குல்லா உ.பி-க்கு ஆபத்து!

By காமதேனு

அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர்களை, ‘ஆபத்து சமிக்ஞை’ என்றும் ‘சிவப்பு எச்சரிக்கை’ என்றும் கிண்டல் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் ரூ.8,600 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட உரத் தொழிற்சாலையையும், எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்துவைத்து உரையாற்றிய மோடி, அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.

“சிவப்பு குல்லா அணிந்தவர்கள் சிவப்பு விளக்கில் (அரசு வாகனங்கள் மேல் சைரனுடன் பொருத்தப்படும் சிவப்பு விளக்கு) மட்டும்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என மொத்த உத்தர பிரதேசத்துக்கும் தெரியும். ஊழல் நடத்தவும், ஆக்கிரமிப்பு செய்யவும், மாபியாக்களைச் சுதந்திரமாகச் செயல்படவைக்கவும் மட்டும்தான் இவர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காகவே இந்தச் சிவப்பு குல்லாக்கள் ஆட்சியமைக்க விரும்புகின்றன” என்று பேசிய மோடி, “இந்தச் சிவப்பு குல்லாக்கள், உத்தர பிரதேசத்தின் சிவப்பு எச்சரிக்கைகள், ஆபத்து சமிக்ஞைகள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

2018-ல் நடந்த மக்களவை இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளில் வென்றது. குறிப்பாக, யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் (அந்தத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்.பியாக இருந்தவர் யோகி) வென்றது அக்கட்சியினருக்குப் புதுத் தெம்பை அளித்தது. (அந்தத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் ‘நிஷாத்’ கட்சியைச் சேர்ந்த ப்ரவீன் குமார் நிஷாத். பின்னர், அவர் பாஜகவில் சேர்ந்து, 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் சந்த் கபீர் நகர் தொகுதியில் வென்று எம்பி ஆனது தனிக்கதை!)

2018 இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் சிவப்பு குல்லா சகிதம் சமாஜ்வாதி கட்சி எம்.பிக்கள் வலம் வந்தனர். அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், “சிவப்பு குல்லா பாஜகவுக்கு எச்சரிக்கை மணி” என்று குறிப்பிட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெல்ல முடியும் என்பதற்கு அந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஓர் அறிகுறி என சமாஜ்வாதி கருதியது. ஆனால், அந்தத் தேர்தலில், உத்தர பிரதேசத்தில், மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வென்றது.

2022-ல் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சியினருக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார் மோடி.

சமாஜ்வாதி கட்சிக் கொடியில் சிவப்பு நிறம் பிரதானமாக இருக்கும் என்பதால், அக்கட்சியினர் அந்த நிறத்திலான தொப்பிகளைப் பிரதானமாக அணிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE