இந்தியாவுக்குள் நுழைந்த ஒமைக்ரான்

By காமதேனு

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் ஊடுருவியிருக்கும் ஒமைக்ரான் இந்தியாவிலும் நுழைந்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “24 மணி நேரத்துக்குள் கர்நாடகத்தில் இரு நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ அறிக்கைகள் நேற்று இரவு மிகவும் தாமதமாகக் கிடைத்தன” என்று குறிப்பிட்டிருக்கிறார். 46 வயதுள்ள ஆணுக்கும், 66 வயதுள்ள ஆணுக்கும் இந்தத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தடமறிந்து தனிமைப்படுத்தும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன.

“வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில், ஆர்டிபிசிஆர் எடுக்கப்படுகிறது. அதில் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக அனுப்பப்படுகின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நாட்டின் முதல் ஒமைக்ரான் தொற்று இது. டெல்டா வைரஸ் உள்ளிட்டவற்றை ஒப்பிட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது எனக் கருதப்படும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் கால் பதித்திருப்பது, கரோனா விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுவதை உணர்த்துகிறது. இதையடுத்து, உடனடியாகப் பதற்றம் அடையத் தேவையில்லை. அதேவேளையில், முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி எனக் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீண்டும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுப்பது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

மேலும், கரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, 2 தவணை தடுப்பூசிகள் போடுவதுடன். பூஸ்டர் டோஸும் போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE