விவாதம் நடத்தித் திரும்பப்பெறப்பட்ட முக்கியச் சட்டங்கள்!

By காமதேனு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமே இன்றி நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில், விவாதம் நடத்தித் திரும்பப் பெறப்பட்டவை என, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில முக்கியச் சட்டங்களை நினைவூட்டியிருக்கிறார். இதுகுறித்த பட்டியலை நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்ததாகவும், அனுமதி கிடைக்காததால் அதை அவையில் வாசிக்க முடியவில்லை என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

“வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அது தொடர்பான மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்றியிருப்பதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம். இதற்கு முன்பு இப்படி எந்தச் சட்டமும் திரும்பப் பெறப்படும்போது விவாதம் நடத்தப்படவில்லை என்பதுபோல் சித்தரிக்க பாஜக அரசு விரும்புகிறது. அப்படி அல்ல என்பதைச் சொல்வதற்காகத்தான், திரும்பப் பெறப்பட்ட முந்தைய சட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வளவு நேரம் விவாதிக்கப்பட்டது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

அவற்றுள் சில:

தங்கம் கட்டுப்பாட்டுச் சட்டம்: 1968-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், 1992-ல் மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக அவையில் 52 நிமிடங்கள் விவாதம் நடந்தது.

மிசா சட்டம்: 1971-ல் அமலுக்கு வந்து, 1978-ல் திரும்பப் பெறப்பட்ட இந்தச் சட்டம் மக்களவையில் 4 மணி நேரம், 24 நிமிடங்களுக்கு விவாதிக்கப்பட்டது.

பொடா சட்டம்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா) 2002-ல் கொண்டுவரப்பட்டு, 2004-ல் மக்களவையில் திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சட்டம் 5 மணி நேரம், 20 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.

2004-ல் திரும்பப் பெறப்பட்ட இடம்பெயர்ந்த நபர்கள் தொடர்பான சட்டம் உள்ளிட்ட சட்டங்கள், 2000-ல் திரும்பப் பெறப்பட்ட நீதி நிர்வாகச் சட்டம் உள்ளிட்ட 17 சட்டங்களையும் நீண்ட நேரம் விவாதம் நடத்திய பிறகே அரசு திரும்பப் பெற்றதாக மல்லிகார்ஜுன கார்கே நினைவுகூர்ந்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE