குலைகிறதா எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை?

By காமதேனு

காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையே விரிசல் மேலும் அதிகரிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் இனி பங்கேற்காது என வெளியாகும் தகவல்கள் இதை உணர்த்துகின்றன.

நவம்பர் 29-ல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், நவம்பர் 30-ம் தேதி, தனது அறையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எல்லா கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தொடரின்போது விவசாயிகளின் கோரிக்கைகள், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகிவரும் சூழலில், இந்த அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரைத் திரிணமூல் காங்கிரஸுக்கு மம்தா பானர்ஜி இழுத்துவருவது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மோடியை மகிழ்விப்பதற்காகக் காங்கிரஸை உடைக்கிறார் மம்தா என மக்களவைக் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகிறார். மல்லிகார்ஜுன கார்கேயும் இதே கருத்தை எதிரொலித்திருக்கிறார். எனினும், கட்சித் தலைமையிடமிருந்து இன்னமும் இதுகுறித்து வெளிப்படையான கருத்துகள் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களிலிருந்து விலகியிருப்பது என திரிணமூல் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளையும் எதிர்கொள்வதால், பாஜகவிடமிருந்து மட்டுமல்லாமல் காங்கிரஸிடமிருந்தும் விலகியிருக்க வேண்டும் என அம்மாநில திரிணமூல் காங்கிரஸார் விரும்புகிறார்கள். அதையே கட்சித் தலைமையும் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. எனவே, மல்லிகார்ஜுன கார்கே நடத்தும் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் எந்தவிதமான சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் எனும் அடிப்படையில் காங்கிரஸுடன் நிற்பது என்றும், பிற கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

திரிணமூல் காங்கிரஸ் ஒதுங்குவதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி, சமாஜ்வாதி போன்ற கட்சிகளும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் என்கிறார்கள். மொத்தத்தில் அரசியல் ரீதியாக, பாஜகவுக்கு எதிரான அணிதிரளுதல் என்பதற்கான வாய்ப்புகள் அருகிக்கொண்டே வருகின்றன என்பதைத்தான் இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE