எப்.சி.கோஹ்லி: ஐ.டி துறையின் தந்தை!

By ஆர்.என்.சர்மா

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளை இளைய தலைமுறை தெரிந்துகொள்வது அவசியம். யாருமே பயணித்திராத பாதையில் முதன்முதலில் செல்வது எவ்வளவு பெரிய சாகசம் என்பதை அதை நிகழ்த்தியவர்களால்தான் உணர முடியும். அப்படியொரு பயணத்தில், தான் சென்றது மட்டுமல்லாமல் ஏராளமானோருக்குப் பயிற்சியும் வழிகாட்டலும் தந்து ஒரு பெரிய நிறுவனத்தை ஆலமரமாக வளர்த்த சாதனைக்காக 2002-ல் பத்ம பூஷண் விருது பெற்றவர் பக்கீர் சந்த் கோஹ்லி (96). பெரும் சாதனைகள் புரிந்து பெருவாழ்வு வாழ்ந்த கோஹ்லி, கடந்த ஆண்டு நவம்பர் 26-ல் மறைந்தார். இன்று அவரது முதலாவது நினைவுநாள்!

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) என்பது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சியையும் வேலைவாய்ப்பையும் அளித்துவரும் முன்னோடி தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இதன் புகழ் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பரவியிருக்கிறது. இந்தத் துறை எப்படிப்பட்டது, இந்தியாவுக்கு இது பொருந்துமா, இதற்குத் தேவை இருக்குமா என்றெல்லாம் தெரியாத காலத்தில் இதில் ஒருவர் நுழைந்தார் என்றால், நிச்சயம் அவரைப் போற்றியே தீர வேண்டும்.

பெஷாவரில் பிறந்தவர்

பக்கீர் சந்த் கோஹ்லி 1924 மார்ச் 19-ல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பெஷாவர் நகரில், பஞ்சாபி இந்து சத்திரிய குடும்பத்தில் பிறந்தார். பெஷாவர் நகர கால்சா நடுநிலைப் பள்ளியிலும் அதே ஊரின் தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். லாகூர் நகரில் இருந்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். கனடா நாட்டின் குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் பிஎஸ்சி., ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கனடா நாட்டில் ஜெனரல் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் ஓராண்டு பணிபுரிந்தார். கனடா எம்ஐடியில் எலக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் படித்து எம்.எஸ் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1951-ல் இந்தியா திரும்பி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்நிறுவனத்துக்காக முதன் முதலில் கணினிகளைப் பயன்படுத்தினார்.

1968-ல் ஆரம்பம்

டாடா கன்சல்டன்சி நிறுவனம் 1968-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிர்வாக, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது இதன் பொறுப்பு. 1951-ல் டாடா மின்னுற்பத்தி நிறுவனத்தில்தான் நிர்வாகியாகச் சேர்ந்தார் கோஹ்லி. ஜாம்ஷெட்ஜி டாடா அவரை 1969-ல் அழைத்து, டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகப் பொறுப்பை ஏற்குமாறு பணித்தார். மிகுந்த அக்கறையுடனும் தொலைநோக்குடனும் அதன் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார் கோஹ்லி. தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு வேலையில் சேர்த்ததுடன், அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைகளும் ஊக்கமும் வழங்கினார், திட்டங்களைத் தீட்டுவதிலும் தடைகளைக் களைவதிலும் துணை நின்றார். ஆயிரக்கணக்கானவர்கள் அவரால் பயிற்றுவிக்கப்பட்டனர். டிசிஎஸ் நிறுவனம், தான் வளர்வதுடன் இந்தியத் தொழில் துறையில் ஏராளமான தொழில் முனைவோரையும் வளர்க்கும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தார். எதைச் செய்வதாக இருந்தாலும் திருத்தமாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். இதனால் கண்டிப்பான தலைவராக சகாக்களால் பார்க்கப்பட்டார். அவருடைய கண்டிப்பும் பயிற்சியும் தங்களுக்குத்தான் பெரிதும் உதவின என்பதை அனைவரும் வளர்ந்த பிறகு உணர்ந்தனர். இதனால், அவரிடம் மரியாதையும் அன்பும் கொண்டனர்.

டோக்கியோவிலேயே டிசிஎஸ் நிறுவனம் தொடங்க அனுமதிக்கப்பட்டதைப் பெரிய அங்கீகாரமாகக் கருதினார் கோஹ்லி. சன் லைஃப் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் டிசிஎஸ் மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக, பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சொசைட்டி டிசிஎஸ்ஸுக்கு விருது வழங்கியபோது பெருத்த மகிழ்ச்சி அடைந்தார். இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் துறைகளைப் புதிதாகத் தொடங்குவதிலும் பெரிதும் உதவியிருக்கிறார். 1995-96-ல் நாஸ்காம் தலைவராக இருந்தார்.

தொடங்கிய காலத்தில் மும்பைப் பகுதியிலிருந்த பல வங்கிகள், தங்களுடைய கிளைகளுடன் பரிவர்த்தனைகளைச் செய்ய கணினிகளைப் பயன்படுத்த டிசிஎஸ் உதவியது. 1972-ல் பம்பாய் மாநகரின் தொலைபேசி அட்டவணையைக் கணினி மூலம் தயாரிக்க டிசிஎஸ் உதவியது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் கோஹ்லியின் பங்கு மிக முக்கியமானது. பொறுப்புமிக்க பதவியில் இருந்தபோதும் இளம் மாணவருக்குரிய உற்சாகத்தோடு, தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்து பின்பற்றிவந்தார்.

டிசிஎஸ் நிர்வாகத்தை மேற்கொண்டபோது, ஐஐடி கான்பூரில் எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் துறையில் கணினியில் சிறப்புப் பாடம் படித்த மாணவர்கள் அனைவரையும் அப்படியே வகுப்போடு டிசிஎஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். ஆரம்பகாலத்தில் சில நூறு பொறியாளர்களோடு தொடங்கிய டிசிஎஸ் நிறுவனம் இப்போது 5,28,000 பேர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறது.

வயது வந்தோர் கல்வி, தண்ணீர் சுத்திகரிப்பு, மாநில மொழிகளைக் கணினியில் பயன்படுத்துவது ஆகியவற்றிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவருடைய சேவையைப் பாராட்டி பல்வேறு பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் பட்டங்களை வழங்கியுள்ளன.

அதனால்தான் கோஹ்லியை ‘இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை’ என்று அனைவரும் அழைக்கின்றனர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE