தொடரும் விவசாயிகள் போராட்டம்: சர்வதேச அளவில் கவனம் ஈர்க்க முடிவு

By காமதேனு

விவசாயிகளின் எதிர்ப்புக்கு ஆளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அண்மையில் பிரதமர் மோடி அறிவித்தார். அத்துடன் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்ற மத்திய அரசின் எதிர்பார்ப்பில், விவசாய சங்கங்கள் மண் அள்ளிப் போட்டுள்ளன.

’3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கை என்பது, ஓராண்டாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு அம்சம் மட்டுமே; இருப்பிலுள்ள இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றும்வரை விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும்’ என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

ராகேஷ் திகைத்

நாளை மறுநாள் (நவ.26) விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு முழுமையடைய இருக்கிறது. அதை முன்னிட்டு தேசிய அளவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அடையாளப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக, பாரதிய விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

பிரதமர் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ள வேளாண் சட்டங்கள் மீதான நாடாளுமன்ற நடவடிக்கையை வலியுறுத்துவதற்காக நவ.29 அன்று நாடாளுமன்றம் நோக்கிய டிராக்டர் பேரணியை ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கிடப்பிலிருக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்தை ஈர்ப்பதன் தொடக்கமாகவும் தங்கள் போராட்டம் அமையும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், நவ.29 அன்று தொடங்கி டிச.23 வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரை முன்னிட்டும், விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையிலும், போராட்டத்தில் உயிர் நீத்த 750 விவசாயிகளின் நினைவைப் போற்றும் வகையிலும், உலகம் தழுவிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தை திட்டமிட்டிருக்கிறார்கள். நவ.25 அன்று ஹைதராபாத்தின் ’மகா தர்ணா’ மூலம் இந்தத் தொடர் போராட்டம் தொடங்குகிறது.

அதன் தொடர்ச்சியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய விவசாயிகளின் பிரதிநிதிகள், அங்குள்ள தங்கள் ஆதரவாளர்களுடன் கடல் கடந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். அதன்படி நவ.26 அன்று லண்டன் இந்திய தூதரகம் முன்பாகவும், தொடர்ந்து நவ.30-ல் பாரிஸ், டிச.4 நியூயார்க், டிச.5 நெதர்லாந்து, டிச.8 வியன்னா என உலகின் பல்வேறு நாடுகளிலும் பதாகைகள் ஏந்திய முழக்கங்களுடன் கூடிய கார் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவை உலுக்கிய விவசாயிகளின் போராட்டத்தின் தொடக்ககாலம், உலகின் கவனத்தையும் வெகுவாய் ஈர்த்தது. பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அவை, மத்திய அரசை மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்கின. தற்போதைய சர்வதேச அளவிலான இந்திய விவசாயிகள் ஆதரவுப் போராட்டம், தேர்தலை எதிர்நோக்கி அடக்கி வாசிக்கும் பாஜக அரசை இருதலைக்கொள்ளியாய் இக்கட்டில் தள்ளியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE