காவி உடையுடன் ராமாயண எக்ஸ்பிரஸில் உணவு பரிமாறப்படாது!

By காமதேனு

’ராமாயண எக்ஸ்பிரஸ்’ ரயிலில் உணவு பரிமாறும் பணியாளர்களின் காவி நிறச் சீருடையை மாற்றிவிடுவதாக, இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஆன்மிகச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஸ்ரீ ராமாயண யாத்திரை விரைவு ரயிலை அறிமுகப்படுத்தியது. இந்த ரயில் சேவை, டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து நவ.7 அன்று தொடங்கப்பட்டது. 17 நாட்கள் தொடர்பயணம் செல்ல திட்டமிட்டுள்ள ராமாயண விரைவுவண்டி அயோத்தி, பிராய்க்ராஜ், நந்திகிராமம், ஜனகபுரம் வழியாக ராமேஸ்வரம்வரை 15 ஊர்களுக்கு 7,500 கி.மீ பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆன்மிகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

இதில் உணவு பரிமாறும் பணியைச் செய்துவரும் ஊழியர்கள் காவி நிற ஜிப்பா, அடர் சிவப்பு நிற பைஜாமா, கழுத்தில் ருத்திராட்ச மாலை, தலைப்பாகை, காவி நிற முகக்கவசம், காவி நிற கையுறை உள்ளிட்டவற்றைச் சீருடையாக அணிந்துள்ளனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் உஜைன் நகரைச் சேர்ந்த இந்து மதத் துறவிகள், ‘ராமாயண ரயில் ஊழியர்கள் காவி உடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். துறவிகள் போல காவி நிற உடை உடுத்தி, கையில் ருத்திராட்ச மாலை அணிவது இந்து மதத்தையும் துறவிகளையும் அவமானப்படுத்தும் செயலாகும்’ என்று உஜைன் அக்‌ஷதா பரிஷத் அமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதே சீருடையோடு இந்த ரயிலை இயக்கும்பட்சத்தில், டிச.12 அன்று டெல்லியில் ரயில் மறியலில் ஈடுபடவிருப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய ரயில்வேத் துறை, “ராமாயண எக்ஸ்பிரஸ் சேவை ஊழியர்களின் சீருடை முற்றிலுமாக தொழில்முறை ஆடையாக மாற்றப்பட்டுவிட்டது. அசவுகரியத்துக்கு வருந்துகிறோம்” என்று எழுத்துப்பட ஒப்புக்கொண்டுவிட்டது.

தற்போது கால்சட்டை - சட்டை என்பதாகச் சீருடை மாற்றப்பட்டுவிட்டது. அதேநேரம், ஏற்கெனவே அணிந்திருந்த காவி நிற முகக்கவசம், கையுறை, தலைப்பாகையில் மாற்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE