இறந்தவருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி?

By காமதேனு

ஜூன் மாதம் இறந்துபோன 80 வயது முதியவருக்கு, நவம்பர் மாதத்தில் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது உ.பி சுகாதாரத் துறை.

உத்தரப் பிரதேசம், சித்தார்த்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதியவர் சத்தியநாராயணன் சிங் (80). இவர், லோட்டன் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக் கொண்டார். தடுப்பூசி முகாமில் அவரது அலைபேசி எண் பதியப்பட்டது.

பிறகு, அவர் அடுத்த டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. ஜூன் 10 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்தார். அவருக்கான இறப்புச் சான்றிதழ் ஜூலை 3 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த நவ.16 அன்று, முதியவர் சத்தியநாராயணன் சிங்குக்கு கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தப்பட்டுவிட்டதாக, அவரது அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பேரன் அன்குர் சிங், சமூக ஊடகங்களில் நடந்த குளறுபடிகளை ஒன்றுவிடாமல் நேற்று பதிவிட்டார்.

அந்தப் பதிவில், தனது தாத்தா லோட்டன் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்ட தேதி, மருந்தைச் செலுத்திய செவிலியரின் பெயர் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் துல்லியமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்தச் செய்தி உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சையானது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சித்தார்த் நகர் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தீப் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சினை கூடியவிரைவில் களையப்படும்” என்று பதிலளித்தார்.

உத்தரப் பிரதேசம் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE