மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை, தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி மாநிலங்களின் விவசாயிகள் கடந்த ஒரு வருட காலமாக டெல்லி எல்லையில் முகாமிட்டு மிகக்கடுமையாக போராடி வருகின்றனர். ஒருவருட காலம் மன உறுதியுடன் நின்று அவர்கள் நடத்திய போராட்டம், தற்போது வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கிறது. இதற்கு அந்த விவசாயிகளும் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது டெல்லிக்குள் நுழைவோம் என்று விவசாயிகள் மத்திய அரசுக்கு கெடுவிதித்து, தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தவிருந்த நிலையில் பிரதமர் மோடி இன்று, 3 வேளாண் சட்டங்களூம் இன்று முதல் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், ‘’இது காலதாமதமான அறிவிப்பு என்றாலும் கட்டாயமான அறிவிப்பு. இதற்குப் பின்னணி காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இப்போதாவது விவசாயிகளின் உணர்வுகளுக்கும், போராட்டத்துக்கும் மதிப்பளித்து இந்தச் சட்டங்களை வாபஸ் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக மத்திய அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு முன்வரவேண்டும்” என்றார்.
காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ. இளங்கீரன், ‘’ஒருவருடமாகப் போராடியும் செவிசாய்க்காத மத்திய அரசு நெருங்கிவரும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை மனதில்வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றிருக்கிறது. எனினும் விவசாயிகள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் போராடினால் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த வாபஸ் அறிவிப்பு. இனி, எந்த அரசாக இருந்தாலும் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட, ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும் என்பதையும் பாடமாக உணர்த்தியிருக்கிறது விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி” என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘’விவசாயிகளின் உயிர்கள் பறிபோனபோதும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் கூட வாபஸ் பெறாதவர்கள் இப்போது வாபஸ் பெற்றிருப்பதற்கு 5 மாநில இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றதுதான். அதனால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்கள். தற்போது எதிர்வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்து இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இதேவிதமான கருத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்.
முன்னதாக தொலைக்காட்சியில் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, ’’நாட்டில் 80 சதவீதம் சிறு விவசாயிகள் இருக்கின்றனர். விவசாயிகளின் வேதனைகளை நேரடியாகவே அறிவேன். அவர்களுக்காக பல திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. சரியான விதைகள், உரம், பயிர்க்காப்பீடு என சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் வேளாண் துறைக்கான நிதி ஒதிக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் இழப்பீட்டிற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களை சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கான நிதியை 2 மடங்காக உயர்த்தி உள்ளோம். விளைபொருளுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தச் சட்டங்கள் சிறு விவசாயிகளின் நலனை வலுப்படுத்தும். இந்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயச் சங்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வேளாண் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தச் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. அதனால் அந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும்” என்று சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான விளக்கத்தை அளித்தார்.
காரணம் எதுவாகினும், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது இந்திய விவசாயிகளின் போராட்ட குணத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருப்பது மறுக்க முடியாத உண்மை.