மணிப்பூரில், அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் கமாண்டராக பணியாற்றியவர் கர்னல் விப்லவ் திரிபாதி. நவ.13 அன்று, தனது மனைவி அனுஜா மற்றும் மகன் அபிர் தேஹங் ஆகியோருடன், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விப்லவ் திரிபாதியை குறிவைத்து பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்கினர். ‘மக்கள் விடுதலை ராணுவம்’ என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக மனைவி, மகனுடன் கர்னல் விப்லவ் இறந்தார். பாதுகாப்புக்காக உடன்சென்ற வீரர்களில் 4 பேரும் இறந்தனர்.
வட கிழக்கு மாநிலங்களில் எல்லைதாண்டிய ஆதரவுடனான தீவிரவாதச் செயல்களின் தாக்கம் அதிகம். அவர்களின் கொட்டத்தை அடக்கவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் அங்கே அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு முகாமிட்டு கடமையாற்றி வருகிறது. இந்திய எல்லையில் சீனாவுடனான உரசல்கள் அதிகரித்திருப்பதால், இந்தத் தீவிரவாதிகள் தங்கள் பயங்கரவாதச் செயல்களையும் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், கர்னல் குடும்பத்தினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் உயிரை துச்சமென மதித்து நாட்டுப் பாதுகாப்பில் களமிறங்கிய கர்னல் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கூட ஒருவகையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கர்னலின் 5 வயது மகனும் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரிக்கிறது.
கர்னல் விப்லவின் தாத்தா கிஷோரி மோகன், ஒரு சுதந்திர போராட்ட வீரர். தந்தை சுபாஷ் திரிபாதி, ஒரு மூத்த பத்திரிகையாளர். தாய் ஆஷா சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். அந்த வகையில் தேசப்பற்றுடன் வளர்க்கப்பட்ட விப்லவ் மற்றும் அவரது தம்பி அனய் திரிபாதி இருவருமே ராணுவ சேவையில் இறங்கினர். அதேவழியில் கர்னல் விப்லவ்வும், தனது 5 வயது மகன் அபிர்க்கும், ராணுவ வீரனாகும் கனவை விதைத்து வந்திருக்கிறார். ராணுவ வீரர்கள் பயிற்சி மாதிரியில், அபிர்க்கான விளையாட்டுகளை வடிவமைத்துத் தந்திருக்கிறார். அரும்பு வயது அபிரின், அப்படியான விநோத விளையாட்டும், சிரத்தையான பயிற்சியும் கலந்து பதிவான ஒரு வீடியோ இன்று பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அபிர் வீடியோ என்ற அடையாளத்துடன் பகிரப்படும் இந்தக் காணொலியில், அந்தப் பிஞ்சு சிறுவனின் விளையாட்டையும் அதில் தெறிக்கும் துடிப்பையும் பார்ப்பவர்களால், பயங்கரவாதம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணரமுடியும்.