நீதிபதியாக காத்திருக்கும் தன்பாலீர்ப்பாளர் சௌரப் கிர்பால்

By எஸ்.எஸ்.லெனின்

தன்பாலீர்ப்பாளரான மூத்த வழக்கறிஞர் சௌரப் கிர்பால், உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக காத்திருக்கிறார். இதற்கு முன்பாக. சில முறை நிராகரிக்கப்பட்ட சௌரப்பின் பரிந்துரை இம்முறை பலிதமானால், இந்தியாவில் நீதிபதியாகும் முதல் தன்பாலீர்ப்பாளர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

இந்தியாவில், பாலின சிறுபான்மையினர் எவரும் இதுவரை நீதிபதியாக பதவி வகிக்கவில்லை. அதாவது, பகிரங்கமாக தங்களை அவ்வாறு அறிவித்துக்கொண்டவர்கள் எவரும் இல்லை. மாறாக, தன்னை தன்பாலீர்ப்பாளர் என வெளிப்படுத்திக்கொண்ட ஒரு மூத்த வழக்கறிஞர், நீதிபதி ஆவதற்காக காத்திருக்கிறார்.

2018-ல் தொடங்கி 4 முறை இவர் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். மற்றுமொரு வாய்ப்பாக அண்மையில்(நவ.11) மீண்டும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். சௌரப் கிர்பாலுக்கான பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்து வருவதன் பின்னணியில் வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. சௌரப் கிர்பாலுடன் இருபதாண்டு காலமாக இணையராக இருப்பவர் ஓர் ஐரோப்பியர். மேலும் அந்த நபர், ஸ்விட்சர்லாந்து தூதரக அதிகாரியாக பணியாற்றுபவர். இந்தியாவில் நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் பின்னணியை ஆராய்வதில், சௌரப் கிர்பாலின் இந்த அம்சம் இவருக்கு தடையாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக முன்பொருமுறை கருத்து தெரிவித்த சௌரப், பாதுகாப்பு காரணங்களைவிட தான், தன்பாலீர்ப்பாளர் என்பதன் அடிப்படையிலேயே நிராகரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சட்டம் பயின்று, 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் சௌரப் கிர்பால், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான கே.என்.கிர்பாலின் மகன் ஆவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE