மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை: விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகைத்

By எஸ்.சுமன்

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் பல்வேறு விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் தொடங்கி ஓராண்டு முழுமை அடைவதை ஒட்டி, பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் புதிய எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு விடுத்திருக்கிறார்.

போராட்டக் களத்தில் விவசாயிகள்

”மத்திய அரசுக்கு நவம்பர் 26 வரை அவகாசமளிக்கிறோம். நவம்பர் 27 முதல் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையும். கிராமங்களில் இருந்து டிராக்டர்களுடன் வரும் விவசாயிகள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள்” என்று ட்விட்டர் மூலமாக இன்று(நவ.1) தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நேற்றைய அறிவிப்பில், “டெல்லி எல்லையிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினால், அரசு அலுவலகங்களை தானிய மண்டிகளாக மாற்றிவிடுவோம்” என்றும் எச்சரித்திருந்தார்.

சாலைகளை மறித்து நீண்ட காலமாக தொடரும் போராட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. பல்வேறு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், விவசாயிகள் போராட்டம் நீடிப்பதை மத்திய அரசும் விரும்பவில்லை. எனவே, டெல்லி எல்லையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இது, விவசாய சங்கங்களுக்கு பதட்டத்தைத் தந்திருக்கிறது. எனவே, போராட்டத்தை தீவிரமாக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதன் அடையாளமாகவே ராகேஷ் திகைத் போன்றவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE