மோடி விமானத்துக்கு வழிவிட்ட பாகிஸ்தான்

By காமதேனு

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வான் எல்லையை அனுமதித்ததன் மூலம், இந்தியாவுக்கான ஆரோக்கிய சமிக்ஞைகளை பாகிஸ்தான் தருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி தனது போயிங் 777 பிரத்யேக விமானத்தில் வெள்ளியன்று இத்தாலி பயணமாக கிளம்பினார். பாகிஸ்தான் வான்பரப்பினூடாக மோடியின் விமானம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்காக முறைப்படி பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இந்திய அதிகாரிகள் அனுமதி கோரினார். ஆட்சேபனையின்றி உடனடி அனுமதி கிடைத்தது.

மோடியின் பிரத்யேக போயிங் 777 விமானம்

இதனையடுத்து இத்தாலிக்கான மோடியின் விமானப் பயணம் பாகிஸ்தான், இரான், துருக்கி வாயிலாக சுமுகமாக நிறைவடைந்தது. ஜி20 உச்சி மாநாடு உள்ளிட்ட வெளிநாட்டு பயண நோக்கங்கள் முடிவடைந்த பிறகு, அதே வான் பாதையில் பாகிஸ்தானை கடந்து மோடியின் விமானம் இந்தியா திரும்ப உள்ளது.

ஆகஸ்ட் 2019-ல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு இயல்பு கெட்டது. அந்த வருடத்தின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மோடி இருமுறை பாகிஸ்தான் வான் எல்லை வாயிலாக விமானப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. அப்போது முறைப்படி அனுமதி கேட்டபோது பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் மோடியின் சௌதி அரேபியா உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்களுக்கு, மாற்று வான் மார்க்கங்களில் செல்ல வேண்டியதாயிற்று.

தற்போது இந்தியப் பிரதமரின் சிறப்பு விமானத்துக்கு வான் பரப்பை திறந்ததன் மூலம், பாகிஸ்தான் தனது இறுக்கம் களைந்து நெருக்கம் பாவிப்பதற்கான சமிக்ஞைகளை தந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE