காஷ்மீரின் கண்கவர் மிதக்கும் திரையரங்குகள்

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியாவின் முதல் முயற்சியாக, மிதக்கும் திரையரங்குகள் காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. காஷ்மீரின் புகழ்வாய்ந்த ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகளில் சாய்ந்தவாறு, திறந்தவெளி திரையரங்காக மிக பிரம்மாண்ட திரையில் காட்சியளிக்கும் சினிமாவை கண்டு ரசிக்கலாம்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதல் ஒரு பக்கம் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம் அமைதியை நாடும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், முடங்கிக் கிடக்கும் மாநில சுற்றுலாவை மேம்படுத்தவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஏரிகளின் திறந்தவெளியில் மிதக்கும் திரையரங்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளிலும் டிரைவ்-இன்-தியேட்டர்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன. திறந்தவெளி திடலில் பெரிய திரையில் காட்சியாகும் சினிமாவை, காரில் அமர்ந்தவாறே கண்டு ரசிக்கலாம். அதே பாணியில், காஷ்மீர் ஏரிகளின் மிதக்கும் திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியின் குளுமை, படகின் தாலாட்டல் மற்றும் ஏகாந்த இரவின் பின்னணியில் பிடித்த சினிமாக்களை ரசிக்கலாம். திரையிடலுக்கு முன்னதாக லேசர் கற்றைகளின் வண்ண வேடிக்கையும் நடத்தப்படுகிறது.

ஸ்ரீநகரின் தால் ஏரியில் தொடங்கப்பட்ட திறந்தவெளி மிதக்கும் திரையரங்கின் முதல் திரைப்படமாக ’காஷ்மீர் கி காளி’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஷம்மி கபூர், ஷர்மிளா தாகூர் நடிப்பில் முழுவதும் காஷ்மீர் பின்னணியில் 1964-ல் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்குரிய திரைப்படங்களில் ஒன்று.

காஷ்மீரில் அதிகரிக்கும் தீவிரவாத குழுக்களின் ஊடுருவல்கள், அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூடுகள், அப்பாவிகளின் உயிர் பலிகள்.. ஆகியவற்றுக்கு மத்தியிலும் அமைதியை விரும்பும் காஷ்மீர் மக்களின் செய்தியாகவும் இந்த மிதக்கும் ஏரிகள் உலகப் பார்வையை ஈர்த்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE