பெட்ரோல், டீசல் விலை உயர்வது ஏன்?

By ஆர்.என்.சர்மா

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இன்று ஒலித்துக்கொண்டிருப்பது, “பெட்ரோல், டீசல் விலை ஏன் தொடர்ந்து உயர்கிறது?” என்ற கேள்விதான். “அதான் எங்களுக்குத் தெரியுமே, மத்திய அரசு உற்பத்தி வரியையும் கூடுதல் வரியையும் சுமத்துகிறது, மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியை சுமத்துகின்றன. பெருந்தொற்றுக்காலத்தில் வேறு இனங்கள் மூலம் வருவாய் பெருகவில்லை, அதே சமயம் நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கிறது, எனவே வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை, அதனால் விலை உயர்ந்துகொண்டே போகிறது”என்று சிலர் சொல்லக்கூடும். இது, உண்மையாகவே இருந்தாலும் சர்வதேசச் சந்தையிலேயே ஏன் விலை அதிகரிக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான கேள்வி. வெள்ளிக்கிழமை (அக்.29) கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு 85.45 அமெரிக்க டாலர்களாக இருந்தது. வெள்ளிக்கிழமை மொத்தம் 7,61,24,800 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியானது. உலகின் தேவையோ பல மடங்கு.

கச்சா எண்ணெய் விலை ஏன் உயருகிறது என்று காரணங்களைப் பார்ப்போம். பெட்ரோலிய கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் (ஒபெக்) நாடுகள் உலக அளவில் தேவை அதிகரித்து வருவதால், உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, விலையை உயர்த்துகின்றன. அதாவது தேவை அதிகம் – அளிப்பு குறைவு, எனவே விலையேறுகிறது.

எண்ணெய் உற்பத்தி நாடுகளிலேயே மிகவும் பெரிதான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இன்னமும் நீக்கவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் சுமுகமாகத் தீர்க்கப்படாததால், ஈரானால் முழு உற்பத்தி அளவை எட்ட முடியவில்லை. சீனா, சிரியா, வெனிசூலா போன்ற நாடுகளுக்கு மட்டும் அது எண்ணெய் விற்கிறது. பிற நாடுகளுக்கு ‘வேறு வழிகள் மூலம்’ விற்கிறது என்றாலும் முழு அளவுக்கு விற்க முடியாமல், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கட்டுப்படுத்துகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட சில நாடுகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் முடங்கிய தொழில், வர்த்தகத் துறை நடவடிக்கைகள் பல நாடுகளில் மீண்டும் தொடங்கிவிட்டன. போக்குவரத்தும் பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது. இவற்றால் எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாது எல்லா நாடுகளுமே தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்படுத்த நினைப்பதால், செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் வழிகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அந்த வகையில் எண்ணெய் உற்பத்தியில் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இறங்கிய அமெரிக்கா, வரப்போகும் குளிர்காலத்துக்காக அதிக அளவு சேமிப்பைக் கையிருப்பில் வைத்திருந்தாலும் பிற நாடுகளுக்கு விற்கத் தயாராக இல்லை. வரப்போகும் குளிர்காலம் அமெரிக்காவில் அவ்வளவு கடுமையாக இருக்காது என்று வானிலை நிபுணர்கள் கூறிவிட்டதால், மேற்கொண்டு உற்பத்தியிலும் ஆர்வம் காட்டவில்லை.

ஏராளமான நாடுகளில், கோவிட்–19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டு மக்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் ஊரடங்கு, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, இந்த ஆண்டில் மட்டும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 60 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம், அளிப்பை கட்டுக்குள் வைத்திருப்போம் என்று எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துவிட்டதால், விலை உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விலையைக் கட்டுக்குள் வைத்திருங்கள், உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கும் எங்களுக்கு விலையில் சலுகை காட்டுங்கள் என்று இந்திய எண்ணெய்த் துறை அமைச்சர் உற்பத்தி நாடுகளிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார். சாதகமான பதில் கிடைத்ததாகத் தெரியவில்லை.

மின்சார உற்பத்திக்குப் பயன்படும் நிலக்கரி, நிலவாயு ஆகியவற்றின் விலையும் ஆசியா முதல் ஐரோப்பா வரை எல்லா கண்டங்களிலும் உயர்ந்துவிட்டது. இதுவும் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலையை இணையாக உயர்த்திவிட்டது.

சீனாவிலும் இந்தியாவிலும் நிலக்கரி உற்பத்தி கிட்டத்தட்ட அடியோடு நின்றுவிடும் அளவுக்கு, மழைக்காலம் மேலும் சில வாரங்களுக்கு நீடித்தது. கடுமையான மழை காரணமாக சரக்கு ரயில்களில் நிலக்கரியை ஏற்றிவர முடியவில்லை. திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்கள் மட்டுமல்லாது, நிலத்துக்கடியில் வெட்டப்படும் சுரங்கங்களிலும் மழை நீர் புகுந்து உயிரிழப்பு அதிகமாகிவிடும் என்று உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கு அமலால் போக்குவரத்தும் நின்று, தொழில் உற்பத்தியும் சுணங்கியிருந்தது. இதனால், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் 6 வாரங்களுக்குத் தேவையான அளவுக்கு நிலக்கரியைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற வழக்கமான நிபந்தனையைப் பின்பற்றவில்லை. இதனால், அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு நிலக்கரியுடன், தேவை அதிகமானபோது உற்பத்தியைப் பராமரிக்க முடியாமல் திணறின.

வழக்கமான எண்ணெய் தேவைகள் போக, நிலக்கரி – நிலவாயு போன்ற மாற்று எரிபொருட்களின் விலையும் உயர்ந்ததால் ஏற்பட்ட மிகு தேவையும்கூட, கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரிப்புக்குக் கூடுதல் காரணமாகிவிட்டது.

இந்த விலை உயர்வு குறுகிய காலத்துக்கு இப்படியே தொடரும் என்றும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீராகும் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணெய்க்கு நல்ல விலை கிடைக்கிறது என்றதும் இப்போது உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிகம் விற்பதற்காக உற்பத்தியைத் தாங்களே அதிகரிக்கும், அதனால் சந்தையில் வரத்து அதிகமாகி விலை நிலையான அளவில் கட்டுக்குள் தொடரும் என்கின்றனர். இந்தக் கருத்து உண்மைதான் என்பதைப் போல, அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சில நாட்களுக்கு முன்னால், புதிதாக 5 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி எண்ணெய் எடுக்கத் தொடங்கியுள்ளன.

கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவு, தேவை அதிகரிப்பு, உற்பத்தியை ஒரேயடியாக அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டு முடிவு, நெருங்கிக்கொண்டிருக்கும் குளிர்காலம் ஆகியவைதான் கச்சா எண்ணெய் இப்படி தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணங்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலில் ஓடும் மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மின்சார பேட்டரிகளில் ஓடும் வாகனங்களை வாங்குவதற்கான சூழலை உருவாக்க பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருக்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது. அது உண்மையல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE