விவசாயிகள் போராட்டத்தை விமர்சிக்கும் பாஜக

By காமதேனு டீம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை, பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்தல்களில் தங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினர் பிரச்சாரம் செய்துவருவதால் கோபத்தில் இருக்கும் பாஜகவினர், விவசாயிகளின் போராட்டத்தின் நம்பகத்தன்மையையும் நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் தொடர்ந்து பேசிவருகின்றனர். கூடவே, தொழில் அமைப்புகளும் விவசாயிகளின் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக, பாரதிய கிஸான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகைத்தின் பேச்சுகள், போராடிவரும் விவசாயிகளை நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன என்கிறார்கள்.

மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகேஷ் திகைத் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், அவருக்குப் பாஜகவினர் பதிலடி தந்துவருகிறார்கள்.

“விவசாயிகள் வயலில் வேலை செய்கிறார்கள். மண்டிகளில் தங்கள் விளைபொருட்களை முன்பு போலவே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்திருக்கிறது. அதற்குப் பிறகும் ஏன் போராட்டம் நடக்கிறது?” என்று ஹரியாணா போக்குவரத்து அமைச்சர் மூல்சந்த் சர்மா நேரடியாக ராகேஷ் திகைத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். “சாலைகள் மூடப்பட்டிருப்பதால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்” என்றும் மூல்சந்த் சர்மா குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதேபோல், பாஜக எம்எல்ஏ சீமா த்ரிகா, கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சூரஜ்பால் அம்மு என வரிசையாக பாஜக தலைவர்கள் ராகேஷ் திகைத்துக்குக் கேள்வி எழுப்பிவருகிறார்கள். டெல்லி - ஹரியாணா எல்லையில் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பது குறித்து, தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கேள்வி எழுப்பிவருகின்றனர். “விவசாயிகள் போராட்டம் செல்லும் திசை சரியாக இல்லை” என்று ஃபரிதாபாத் தொழில்கள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாட்டியாவும் விமர்சித்திருக்கிறார். ஆனால், “டெல்லி - ஹரியாணா சாலையை நாங்கள் மறிக்கவில்லை. அரசுதான் மறித்திருக்கிறது” என்று ராகேஷ் திகைத் விளக்கமளித்திருக்கிறார்.

ஹரியாணாவின் எல்லெனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் அக்டோபர் 30-ல் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி) வேட்பாளருக்கு விவசாயிகள் ஆதரவளிப்பார்கள் என ராகேஷ் திகைத் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். இந்தத் தொகுதியில் ஐ.என்.எல்.டி-க்கும் பாஜகவுக்கும்தான் நேரடிப் போட்டி என்பது கவனிக்கத்தக்கது. விவசாயிகள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் என விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், ராகேஷ் திகைத் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகக் களமாடிவருகிறார். பிற கட்சிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாரோ இல்லையோ, பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தர பிரதேசத்திலும் அக்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அவர் சூளுரைத்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, டி20 கிரிக்கெட் உலகப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததற்கு மோடி அரசுதான் காரணம் என்று ராகேஷ் திகைத் கூறியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. “பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றால் சிலர் பட்டாசு வெடிப்பார்கள்; சிலர் இந்திய வீரர்களை அவமதிப்பார்கள். இதெல்லாம் பாஜகவினருக்கு ஆதரவாகத் திரும்பும் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைய ஏற்பாடு செய்யப்பட்டது” எனப் பேசிய ராகேஷ், இதையெல்லாம் கிராமத்து மக்கள் சிலர் தன்னிடம் சொன்னதாகக் கூறியது பெரும் சர்ச்சையானது.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் பாஜகவினர், தற்போது ராகேஷ் திகைத்தின் வார்த்தைகளை வைத்தே விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்துவருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE