கோஸாவி கைது: துப்பறிவாளனுக்கான துரத்தல் முடிவுக்கு வந்தது

By எஸ்.எஸ்.லெனின்

போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைதாகி இருக்கும் ஆர்யன் கான் வழக்கின் சாட்சியான கிரண் கோஸாவி என்ற நபரை, மற்றொரு வழக்கில் புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், சொகுசுக் கப்பல் விருந்தொன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அக்.3 அன்று கைதானார். இந்த வழக்கின் சுயாதீன சாட்சிகளாக சேர்க்கப்பட்ட சிலர், ஆர்யன் கான் உடன் மும்பை என்சிபி அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். அப்போது தன்னை தனியார் துப்பறிவாளனாக அறிமுகம் செய்துகொண்ட கிரண் கோஸாவி என்ற நபர், ஆர்யனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

கோஸாவியின் செல்ஃபி

சமூக வலைதளங்களில் வைரலான இந்த செல்ஃபி மூலமே, ஆர்யன் கான் கைதானது பொதுவெளியில் உறுதியானது. மேலும் அந்தப் புகைப்படத்தின் மூலம், கோஸாவி ஒரு ஏமாற்றுக்காரர் என்பதும் பணமோசடி வழக்கில் தேடப்படுபவர் என்றும் புனே போலீஸாருக்கு தெரிய வந்தது. வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்த கோஸாவி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பலரை லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை தூசு தட்டிய போலீஸார், கோஸாவி வெளிநாடுகளுக்கு தப்பாதிருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கச் செய்தனர். மாநில எல்லைக்கு அப்பால் பதுங்கி போக்குகாட்டிய கோஸாவியை, மகாராஷ்டிர போலீஸார் துரத்த ஆரம்பித்தனர்.

என்சிபி அலுவலகத்தில் ஆர்யன் கானுக்கு உதவும் கோஸாவி

தலைமறைவாக இருந்த கோஸாவி குறித்து அவரது பாதுகாவலரும், ஆர்யன் கான் வழக்கின் மற்றுமொரு சாட்சியுமான பிரபாகர் சாய்ல் என்பவர் இன்னொரு விவகாரத்தைக் கிளப்பினார். ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க, கோஸாவி முன்னிலையில் ஷாருக் கான்-சமீர் வான்கடே தரப்பினர் ரூ.25 கோடிக்கு பணபேரம் நடந்ததாக குற்றம்சாட்டினார். என்சிபிக்கு எதிராகத் தொடர்ந்து புகார்களை தொடுத்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், இந்த பணபேர விவகாரத்தின் மூலம் தனது முந்தைய குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த ஆரம்பித்தார். அரசியல் மற்றும் தனிநபர் தாக்குதல் அளவு மீறியதை அடுத்து, அக்.25 அன்று டெல்லி என்சிபி தலைமையகத்தில் இதுகுறித்து சமீர் வான்கடே விளக்கமளித்தார்.

சமீர் வான்கடே

இதனிடையே, தனது தலைமறைவையும் என்சிபியின் ஆர்யன் கான் வழக்கையும் முடிச்சிட்டு கோஸாவி மேலும் பிரபலமானார். அந்த வழக்கால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் பரப்பினார். இதனால் எரிச்சலடைந்த போலீஸார், கோஸாவியை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டனர். கோஸாவியின் அடுத்த அதிரடியாக, மகாராஷ்டிர மாநில போலீஸார் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் உத்திர பிரதேசம் லக்னோவில் தான் சரணடைய தயாராக இருப்பதாகவும் தகவல் தந்தார். கோஸாவியின் கோரிக்கையை லக்னோ போலீஸார் நிராகரித்தனர்.

இவற்றுக்கு மத்தியில், என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீதான பணபேர புகாரை விசாரிக்க, அத்துறையின் டெல்லி விஜிலன்ஸ் அதிகாரிகள் நேற்று(அக்.27) மும்பை வந்தனர். இந்நிலையில், கோஸாவி கைது செய்யப்பட்டிருப்பதாக புனே போலீஸ் கமிஷ்னர் அமிதாப் குப்தா இன்று காலை(அக்.28) தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE