வெங்காய மண்டிகளில் ஐ.டி. ரெய்டு: பதுக்கலின் பின்னணி என்ன?

By ஆர்.என்.சர்மா

மகாராஷ்டிரத்தில் வெங்காய மண்டிகளில், வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டிருப்பது பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது. பதுக்கப்படும் வெங்காயம் குறித்த தகவல்களுடன், பண்டிகைக் கால வியாபாரத்தில் லாபம் பார்க்க நினைக்கும் மனிதர்களின் பேராசை குறித்த விவாதமும் எழுந்திருக்கிறது.

வெங்காய சாகுபடியிலும் ஏற்றுமதியிலும் மகாராஷ்டிரம் முதலிடத்தில் இருப்பது, அனைவரும் அறிந்ததே. அங்கு ஆண்டுதோறும் வெங்காயத்துக்குத் தேவை அதிகரிக்கும் பருவத்தில், அதைப் பதுக்குவதும் விலையேற்றுவதும் வழக்கம். இப்போது தீபாவளி நெருங்கும் நேரத்தில் வெங்காயம் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. பருவமழை மேலும் சில வாரங்களுக்கு நீடித்ததாலும் சந்தைக்கு வெங்காயம் வரத் தாமதமாவதாலும் வண்டி வாடகை, பெட்ரோல் – டீசல் விலை உயர்வாலும் வெங்காயம் விலை ஏறுகிறது என்கிறார்கள் விவசாயிகள். எனினும், இதன் பின்னே வேறு சில விவகாரங்கள் இருக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை முதல், நம்பகமான தகவல்களை அடுத்து வருமானவரித் துறையினர் நாக்பூரிலும் இதர நகரங்களிலும் நடத்திய திடீர் சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத ரூ.24 கோடி ரொக்கம் பிடிபட்டது. அத்துடன் முதல் நோக்கிலேயே 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தெரிய வந்தது. மேலும் பல கிடங்குகளில் சோதனைகள் தொடர்கின்றன. இதையடுத்து எங்கிருந்தோ வெங்காயம் மூட்டை மூட்டையாகச் சந்தைக்கு வரத் தொடங்கின. விளைந்த வெங்காயம் என்றால் சற்று ஈரம் இருக்கும். இவை நன்கு காய்ந்த வெங்காயங்கள். இவை இத்தனை நாட்கள் எங்கு பதுக்கப்பட்டிருந்தன எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால், இவ்விஷயத்தில் வியாபாரிகள் வெளிப்படையாக உண்மையை ஒப்புக்கொள்ள முன்வருவதில்லை.

இப்போது வெங்காயம் மொத்த விலைச் சந்தையில் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துவிட்டது. கிலோ ரூ.30-க்கு விற்கிறது. இதற்குக் காரணம் வெங்காய வரத்து அதிகரித்ததுதான் என்கின்றனர் வியாபாரிகள். விவசாயிகளிடம் குறைவாகப் பணம் தந்து வாங்கும் மொத்த வியாபாரிகள், அதைப் பல மடங்கு லாபம் சேர்த்து விற்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அரசியல்; 2-வது அரசியல்வாதிகளின் அரவணைப்பு. விவசாய வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. மாதச் சம்பளக்காரர்களைத் தவிர, மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வசதியாக வாழ்வதற்கு இந்த விவசாய வருமான விலக்கு வரம்புதான் முக்கிய காரணம். இதைக் கைவைத்தால் நம் நாட்டில் வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள்வரை கொதித்தெழுந்துவிடுவார்கள். ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது, விவசாயத்தில் லாபம் எங்கே வருகிறது, நஷ்டம்தான் என்பார்கள். இது உண்மைதான்; குறு, சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு நஷ்டம்தான். பேராசைக்காரர்கள்தான் இப்படி நியாயமின்றி நடந்துகொள்கிறார்கள்.

பலமுறை அறிந்த உண்மை, மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது ரொக்கம் தந்துதான் விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். அதற்கு ரசீது கிடையாது. ஒரு கிலோ ரூ.30 கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி, கிலோ ரூ.35-க்கு விற்பதாகவும் அதிலும் பயங்கரமாக நஷ்டம் ஏற்படுவதாகவும் வியாபாரிகள் கணக்கு எழுதியிருக்கிறார்கள். இந்த மொத்த வியாபாரிகளுக்குத்தான் சமூகத்தின்மீது எவ்வளவு அக்கறை பாருங்கள்; கடுமையான நஷ்டத்துக்கு நடுவிலும்கூட விடாமல் வியாபாரத்தைத் தொடர்கிறார்கள். இவர்களில் பலர் அந்தப் பணத்தைச் சும்மா வைத்திருக்க விரும்பாமல், ரியல் எஸ்டேட் என்கிற வீட்டு மனை – அடுக்கக வியாபாரத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். மண்ணில் விளையும் வெங்காயத்தை வாங்கி, பணத்தை மீண்டும் மண்ணிலேயே போட்டுவிடுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள்.

இதுபோன்ற ரெய்டுகளும் புதிதல்ல. மகாராஷ்டிரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இப்படியான அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனினும், பதுக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இந்தத் தீபாவளிக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் இதுதான். வெங்காயம் மட்டுமல்லாமல் சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கும் பதுக்கலும் கள்ளச்சந்தையும்தான் காரணம். பதுக்கலைக் கண்டுபிடித்து விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவது அரசுகளின் கடமை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE