புதிய அணியை உருவாக்கும் ‘கேப்டன்’!

By வெ.சந்திரமோகன்

பஞ்சாப் அரசியலின் அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்கின்றன. கடந்த மாதம் முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் பாஜகவுடன் கைகோர்ப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் வெளியிட்ட ட்வீட்டுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கேப்டனின் அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கூடவே, ‘விவசாயிகளின் நலனுக்கு உகந்த வகையில் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும்பட்சத்தில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு’ எனும் வாசகத்தையும் கேப்டன் பயன்படுத்தியிருக்கிறார். அது தேசிய அளவிலும் கவனம் ஈர்த்திருக்கிறது.

அதிர்ச்சி வைத்தியம்

அமரீந்தர் சிங்குக்கும், நவ்ரோஜ் சிங் சித்துவுக்கும் இடையே நடந்துவந்த மோதல் உச்சமடைந்த நிலையில், கட்சித் தலைமை கொடுத்த அழுத்தத்தால் வேதனையுடன் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங். அதன் பின்னர் காங்கிரஸுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவருகிறார். ராஜினாமா செய்த கையோடு டெல்லி சென்று முதல் வேலையாக அமித் ஷாவைச் சந்தித்தார். உடனே, கேப்டன் பாஜகவில் இணைவார் என்று ஊகங்கள் கிளம்பின. ஆனால், பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான மனநிலை நிலவும் நிலையில், அக்கட்சியில் இணைவது பலன் தராது என்பதை நன்றாக அறிந்திருக்கும் அமரீந்தர் சிங், புதிய கட்சியைத் தொடங்குவது என முடிவுசெய்தார். இதோ, இப்போது அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

கூடவே அகாலி தளத்திலிருந்து பிரிந்துவந்த ரஞ்சித் சிங் பரம்புரா, சுக்தேவ் திண்ட்ஸா ஆகியோருடனும் கைகோர்க்க அவர் முடிவுசெய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, காங்கிரஸிலிருந்து பல தலைகள் அவர் தொடங்கவிருக்கும் கட்சியில் இணைய காத்திருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா?

காங்கிரஸில் இருந்தபோதும் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக அரசு முன்னெடுக்கும் விஷயங்களுக்கு எப்போதுமே ஆதரவளித்துவந்தவர் அமரீந்தர் சிங். மோடி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் நல்லுறவைப் பேணுகின்றவர் அவர். எனவே, பாஜகவுடனான அரசியல் கூட்டணியை அமைத்துக்கொள்வது அவருக்கு எளிது.

விவசாயிகள் பிரச்சினைக்குத் தனது முயற்சியின் மூலம் தீர்வு கண்டு, பாஜகவுக்கும் நற்பெயரைப் பெற்றுத்தந்து, அதைச் சொல்லி பாஜக கூட்டணியுடன் பஞ்சாபில் மீண்டும் அரியணை ஏறுவது என்பதுதான் அமரீந்தர் சிங்கின் திட்டம். அதற்காக வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவரது பிரதானச் செயல்திட்டம். கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அமரீந்தர் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மத்திய அரசு மறுத்துவிட்டால், பாஜகவுக்குச் சேதாரம் விளைகிறதோ இல்லையோ, அமரீந்தரின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும்.

ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல. அவரது வேண்டுகோளை 3 வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஒரு மாநிலத் தேர்தல் வெற்றிக்காக இப்படியான முடிவை பாஜக எடுக்குமா என்பது முக்கியமான கேள்வி. அதேவேளையில், தேர்தலுக்காகக் காத்திருக்கும் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஜாட் சமூக விவசாயிகள் மத்தியிலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை இருப்பதாகக் கருதப்படுகிறது. ஹரியாணா விவசாயிகள் மத்தியிலும் இதே எதிர்ப்புணர்வு நிலவுகிறது. எனவே, இவ்விஷயத்தில் பாஜக ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிலை.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மத்திய அரசு மறுத்துவிட்டால், பாஜகவுக்குச் சேதாரம் விளைகிறதோ இல்லையோ, அமரீந்தரின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும். ஒருவேளை இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதைத் தற்காலிகமாக (அதாவது, சட்டப்பேரவைத் தேர்தல் வரை) நிறுத்திவைக்க ஏற்பாடு செய்துகூட, விவசாயிகளின் கோபத்தைத் தணித்து அவர்களின் ஆதரவைப் பெற அமரீந்தர் சிங் முயலலாம். எப்படிப் பார்த்தாலும் கேப்டனின் எதிர்காலம் பாஜகவின் கையில்தான் இருக்கிறது.

கவலையைக் காட்டிக்கொள்ளாத காங்கிரஸ்

அமரீந்தர் சிங்கின் இந்த முடிவால் தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்கிறது காங்கிரஸ். ஆனால், ஒவ்வொரு நாளும் அக்கட்சிக்குப் பாதகமான சூழல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிரோன்மணி அகாலி தளம் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் சூழலில், பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளைத் தக்கவைக்கவே அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜீத் சிங்கை முதல்வராக்கியது காங்கிரஸ். மறுபுறம் ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் பாஜகவுடன் கைகோர்த்து கேப்டன் களமிறங்கினால், காங்கிரஸுக்கான ஆதரவு வாக்குகள் பெருமளவு சிதறும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தக் கட்டுரை எழுதப்படும் கணம் வரை, காங்கிரஸிலிருந்து கேப்டன் வெளியேறவில்லை; கட்சித் தலைமையும் அவரை வெளியேற்றத் தயங்குகிறது. ஒருபுறம் அவரைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டே மறுபுறம் அவரைச் சமாதானப்படுத்த முதல்வர் சரண் ஜீத் சிங்கை அனுப்பிப் பேசிப் பார்த்தது. ஆனால், கேப்டன் இறங்கிவருவதாக இல்லை. இதுவரை அமரீந்தர் சிங்கின் தனிப்பட்ட செல்வாக்கு காங்கிரஸுக்குப் பஞ்சாபில் பலம் சேர்த்துவந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லவில்லையென்றால் முதல்வர் பதவியிலிருந்தே விலகத் தயார் என்று சவால்விட்டு, அதைச் செய்தும் காட்டியவர் அமரீந்தர் சிங். மொத்தம் உள்ள 13 இடங்களில் 8 இடங்கள் காங்கிரஸுக்குக் கிடைத்தன. இந்நிலையில், அவர் புதிய கட்சி தொடங்குவது காங்கிரஸுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். கூடவே, பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் உணர்வை விளைச்சலாக்கி அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பும் காங்கிரஸுக்கு இனி மிக மிகக் குறைவு.

அழுத்தம் கொடுத்து அமரீந்தர் சிங்கைப் பதவிவிலகச் செய்ததன் பலனையும் காங்கிரஸ் அனுபவிக்கப்போகிறது. சித்துவுக்கும் அமரீந்தர் சிங்குக்கும் இடையில் மோதல் உருவானபோது, காங்கிரஸ் தலைமை சித்து பக்கம் நின்றது. குறிப்பாக, பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் சித்துவுக்கு ஆதரவாக எடுத்த முடிவுகள் காங்கிரஸுக்குத் தலைவலியாகியிருக்கின்றன.

வியூகம் வெற்றி பெறுமா?

காங்கிரஸிலிருந்து கேப்டன் வெளியேறுவது இது முதல்முறை அல்ல. 1984-ல் அமிர்தசரஸின் பொற்கோயிலில் மறைந்திருந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது ராணுவம், பஞ்சாப் போலீஸ் இணைந்து நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸிலிருந்து விலகியவர் அமரீந்தர் சிங். சிரோன்மணி அகாலி தளத்தில் சேர்ந்த அவர், நீண்ட காலம் அக்கட்சியில் இருந்தார். அக்கட்சியின் ஆட்சியில் அமைச்சர் பதவியிலும் அமர்ந்தார். பின்னர் 1992-ல் அக்கட்சியிலிருந்து விலகி, சிரோன்மணி அகாலி தளம் (பந்திக்) எனும் கட்சியைத் தொடங்கினார். எனினும், 1997 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்த மரண அடி அவரை மறுபடியும் காங்கிரஸுக்குள் கொண்டுவந்தது. அந்தத் தேர்தலில், அவரது சொந்தத் தொகுதியான தல்வண்டி சபோவிலேயே அவருக்கு வெறும் 856 வாக்குகள்தான் கிடைத்தன.

ஆக, காங்கிரஸில் மீண்டும் சேர்ந்த பின்னர்தான் அமரீந்தரின் அரசியல் பாதை தெளிவுபெற்றது. பஞ்சாப் காங்கிரஸும் செழித்தது. அதே காங்கிரஸிலிருந்து வெளியேறவிருக்கும் அமரீந்தர், தனது முயற்சியில் வெற்றி பெறுவாரா காங்கிரஸ் கோட்டை சரியுமா என்பதை, அவரது அடுத்தகட்ட நகர்வுகளும், அரசியல் திருப்பங்களும் காட்டிவிடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE