ஆர்யன் கானுக்கு எதிராக கஞ்சா வழக்கு?

By எஸ்.எஸ்.லெனின்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகி சிறையிலிருக்கும் ஆர்யன் கானுக்கு எதிராக, கஞ்சா விநியோக விவகாரம் ஒன்றையும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புதிதாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தொன்றில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகித்ததாக ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய ஆர்யனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பை ஆர்தர் சாலை சிறையில் ஆர்யன் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆர்யனுக்கு எதிராக, புதிய போதை விவகாரத்தையும் போதை தடுப்பு அதிகாரிகள்(என்சிபி) கிளறத் தொடங்கி உள்ளனர்.

என்சிபி விசாரணைக்கு செல்லும் அனன்யா

ஆர்யனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதில், அவரது செல்போனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சொகுசுக் கப்பல் சம்பவத்துக்கு முன்னரும் தொடர்ந்து போதைப்பொருட்களை ஆர்யன் உபயோகித்து வந்ததும், அவற்றுக்காக சர்வதேச அளவிலான தொடர்புகளை அவர் கையாண்டதும் அந்த வாட்ஸ் அப் உரையாடல்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்தத் தகவல் பகிர்வுகளின் மூலங்களை அதிகாரிகள் தீவிரமாக துழாவத் தொடங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக, போதை விவகாரத்தில் ஆர்யனுக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். அந்த வகையில், அனன்யா பாண்டே என்ற நடிகையை மும்பை என்சிபி அலுவலகத்துக்கு வரவழைத்தனர். நேற்று(அக்.21) தனது தந்தையுடன் வருகை தந்த அவரிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2-வது நாளாக இன்றும்(அக்.22) அனன்யா பாண்டே வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ஆர்யன் கான்

ஆர்யனுக்கு கஞ்சா போதைப் பொருள் உபயோகிக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதனை அனன்யா பாண்டே பிறிதோரிடத்திலிருந்து பெற்றுத் தந்ததாகவும் வாட்ஸ் அப் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது. ஆனால் அனன்யா, கிளிப்பிள்ளை போல தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதாகவும் தெரிகிறது. இந்த விசாரணையில் உருப்படியான தகவல் கிடைத்தால், ஆர்யன் மீதான விசாரணை வளையம் மேலும் இறுகும். புதிய போதை தடுப்பு வழக்கும் அவர் மீது தொடுக்கப்படலாம்.

ஆர்யனுக்கு எதிரான போதைப்பொருள் வழக்கின் பாதை அரசியல், பாலிவுட், போதை மாஃபியா என மட்டங்களில் நாளொரு சர்ச்சையைக் கூட்டி வருகிறது. வழக்கின் தொடக்கத்திலிருந்து தீவிரம் காட்டிவரும் என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவுக்கு எதிராகவும் மகாராஷ்டிரா ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தனி நபர் தாக்குதல் அளவுக்கு மோசமாகி வரும் அந்தக் குற்றச்சாட்டுகளை சமீர் வான்கடேவும் மறுத்து வருகிறார். இந்நிலையில், அவர் தலைமையிலான என்சிபி அதிகாரிகள் கையில் புதிய சாட்சியங்கள் கிடைத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE